ஈராக்கில் மத தலைவரின் ஆதரவாளர்கள் மற்றும் ராணுவத்தினர் இடையிலான மோதல் சம்பவத்தில் பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்தது.

ஈராக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த பொதுத்தேர்தலில் அந்த நாட்டின் செல்வாக்கு மிக்க ஷியா மத தலைவர் முக்தாதா அல்-சதாரின் கட்சி 73 இடங்களை கைப்பற்றியது. எனினும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை அக்கட்சி பெறுவில்லை.

இதனால் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க வேண்டிய சூழல் உருவானது. ஆனால் ஈரான் ஆதரவு கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க அல்-சதார் மறுத்தார். இதனால் புதிய அரசு அமைவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. இதற்கிடையில் ஈராக்கின் இடைக்கால பிரதமராக அல்-சதாருக்கு நெருக்கமானவரான முஸ்தபா அல் கதாமி நியமிக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து, ஈரான் ஆதரவு கட்சிகள் புதிய பிரதமருக்கான வேட்பாளராக ஈரான் அரசுக்கு நெருக்கமான அல்-சூடானியை முன்நிறுத்தின. இதற்கு அல்-சதார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதனை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் அல்-சூடானி தலைமையில் புதிய அரசு அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர்.

நாடாளுமன்றம் முன்பு முகாமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அல்-சதார் ஆதரவாளர்கள் 2 முறை நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து சூறையாடினர். இதனால் ஈராக்கில் தொடர்ந்து அரசியல் குழப்பம் நீடித்து வந்தது.

இந்த நிலையில், அரசியலில் இருந்து விலகுவதாக அல்-சதார் நேற்று முன்தினம் அறிவித்தார். இதனால் அதிருப்தி அடைந்த அவரது ஆதரவாளர்கள் தலைநகர் பாக்தாத்தில் பெரும் வன்முறையில் ஈடுபட்டனர். பாக்தாத்தில் உள்ள அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் சூறையாடினர்.

மேலும் அங்கு வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள பசுமை மண்டலம் பகுதியில் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அல்-சதார் ஆதரவாளர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. பசுமை மண்டலம் பகுதியில் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியவர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதேபோல் பாக்தாத் முழுவதும் அல்-சதார் ஆதரவாளர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையில் நடந்த சண்டைகளால் அந்த நகரமே கலவர பூமியானது. இந்த வன்முறையில் தற்போது வரை 30 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் 300-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இதனிடையே இருதரப்புக்கும் இடையிலான மோதல் பாக்தாத்தில் இருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியுள்ளது. இதனால் ஈராக் முழுவதும் கடும் பதற்றம் நிலவி வருகிறது. இதை தொடர்ந்து வன்முறையை கட்டுப்படுத்தும் விதமாக இடைக்கால பிரதமர் முஸ்தபா அல் கதாமி நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார்.

மேலும் அவர் அல்-சதார் இதில் தலையிட்டு வன்முறையை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார். அதன்படி வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ள அல்-சதார் அனைத்து தரப்பினராலும் வன்முறை மற்றும் ஆயுதங்களை பயன்படுத்துவதை நிறுத்தும் வரை தனது உண்ணாவிரத போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார்.