“வளம் மிகுந்த காலம் முடிவுக்கு வருகிறது” அமைச்சரவையில் மக்ரோன் எச்சரிக்கை!

Kumarathasan Karthigesu

“நிறைவான வளங்கள் மிகுந்த காலம் முடிவுக்கு வருகிறது” (la fin de l’abondance) என்று தெரிவித்துள்ள அதிபர் மக்ரோன், நாடும் உலகமும் மிகக் கடுமையான காலத்தை எதிர்கொள்ளவுள்ளதாக எச்சரித்துள்ளார். நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்கின்ற அதே சமயத்தில் தியாகங்கள் புரிவதற்கும் தயாராக இருக்குமாறு அவர் பிரெஞ்சு மக்களைக் கேட்டிருக்கிறார்.

கோடை விடுமுறையின் பின்னர் அமைச்சர்கள் கலந்துகொண்ட முதலாவது அமைச்சரவைக் கூட்டம் கடந்த புதன் கிழமை எலிஸே மாளிகையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திலேயே வரவிருக்கும் நெருக்கடிகள் தொடர்பாக மக்ரோன் எச்சரிக்கைகளை விடுத்தார்.

உலகின் தாராளமான – வளம் மிகுந்த -சுபீட்ச காலம் முடிவுக்கு வருகிறது என்ற அர்த்தத்தில் “end of abundance” (In English) என்று அவர் தெரிவித்த கடும் வார்த்தை உள் நாட்டு அரசியலிலும் அயல் நாடுகளிலும் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஓர் அரசுத் தலைவராக அவர் வெளியிட்ட அந்த வார்த்தைப் பிரயோகத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

கொரோனா பெருந் தொற்று, உக்ரைன் போர், புவிசார் அரசியல் பதற்றங்கள், அண்மைக் காலமாகத் தொடர்ச்சியாக நீடித்துவருகின்ற வரட்சி, காட்டுத் தீ என்பவற்றின் காரணமாக உலகெங்கும் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதாரச் சீர்குலைவுகளையும்

பண வீக்க நெருக்கடிகளையும் அடிப்படையாகக் கொண்டே முழு உலகமும் நாடுகளும் எதிர்கொள்கின்ற சவால்களை மக்ரோன் இவ்வாறு கடுமையான வார்த்தை மூலம் வர்ணித்துள்ளார் என்று பிரான்ஸின் பொருளாதார நிபுணர்கள் சிலர் கருத்து வெளியிட்டிருக்கின்றனர்.

வாழ்க்கைச் சுமை அதிகரிப்பு, தண்ணீர்த் தட்டுப்பாடு, குளிர்கால எரிசக்தி நெருக்கடி போன்ற நிலைமைகளுக்கு நாட்டு மக்களைத் தயார்ப்படுத்தும் நோக்குடனேயேஅரசுத் தலைவர் இவ்வாறு முன்கூட்டியே எச்சரிக்கையை வெளியிட்டிருக்கிறார் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

ரஷ்யா விதித்த கட்டுப்பாடுகளை அடுத்து ஐரோப்பா பெரும் எரிசக்தி நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. அடுத்த ஆண்டில் மின் மற்றும் எரிவாயுக் கட்டணங்கள் பாவனையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் அளவுக்கு அதிகரிக்கும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. அதே சமயத்தில் பிரான்ஸிலும் உலகின் பல பகுதிகளிலும் ஏற்பட்டிருக்கின்ற கடும் வரட்சி போன்ற பருவநிலை அனர்த்தங்கள் உணவுத் தட்டுப்பாட்டையும் உலகப் பொருளாதாரத்தில் பெரும் நெருக்கடிகளையும் உருவாக்கும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.