அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக தடையில்லை- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வகையில் திமுக அரசு கடந்த 2006 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி பட்டியல் இனத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 28 பேரை தமிழக அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அர்ச்சகர்களாக நியமித்தது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்திற்கு தடை கோரி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அதன் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், தமிழக அரசின் முடிவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், சுப்ரமணியின் சுவாமி மனுவிற்கு தமிழ்நாடு அரசு பதில் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்துள்ளது. ஏற்கனவே அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை சேர்த்து இந்த மனு விசாரிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.