குளிர் காலத்தில் மின்சாரம், எரிவாயு பங்கிட்டு வழங்க நேரலாம்!பிரதமர் போர்ன் எச்சரிக்கை பாதிப்பைத் தவிர்ப்பதற்காக சிக்கனத் திட்டம் நடைமுறை.
Kumarathasan Karthigesu
வரவிருக்கும் பனிக் காலத்தில் தொழில் நிறுவனங்களுக்கான எரிசக்தியைப் பங்கிட்டு (rationing) வழங்கவேண்டிய நிலைமை உருவாகலாம் என்று பிரதமர் எலிசபெத் போர்ன் எச்சரிக்கை செய்துள்ளார். பெரு நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களது உரிமையாளர்களைச் சந்தித்து
நாட்டின் எரிசக்தி நிலைமை தொடர்பாகக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு எச்சரித்தார். மின்சாரம், எரிவாயு என்பவற்றைப் பங்கிட்டு வழங்கும் நிலை வந்தால் அதனால் பெரிதும் பாதிக்கப்படப் போவது தொழில் நிறுவனங்கள்தான் என்பதைச் சுட்டிக் காட்டிய அவர், அத்தகைய நிலை வராமல் தவிர்ப்பதற்கு ஒன்று பட்ட சிக்கனச் செயற்பாடு அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார். மின் மற்றும் சமையல் எரிவாயுவை இயன்றளவு சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நாட்டு மக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நிறுவனங்கள் தங்களது மின் மற்றும் எரிவாயுப் பாவனையைப் பத்து சதவீதத்தால் குறைப்பதற்கான திட்டம் ஒன்றை அரசு அறிவித்துள்ளது. “எரிசக்தி நிதானத் திட்டம்”(“plans de sobriété”) எனப்படுகின்ற அந்த சிக்கனத் திட்டத்தை செப்ரெம்பர் மாதம் முதல் கடைப்பிடிக்குமாறு சகல நிறுவனங்களையும் அரசு கேட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் எரிசக்தி நிலைவரத்தை ஆராய்வதற்காக பாதுகாப்புச் சபைக் கூட்டம் ஒன்றை அதிபர் மக்ரோன் எதிர்வரும் வெள்ளிக் கிழமை எலிஸேயில் கூட்டவுள்ளார்.
பிரான்ஸ் உட்பட ஐரோப்பிய நாடுகளுக்கான இயற்கை எரிவாயு விநியோகத்தை ரஷ்யா குறைத்ததை அடுத்து அந்நாடுகள் பெரும் எரிசக்தி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. பொதுவாகக் குளிர் காலப்பகுதியில் எரிசக்திப் பாவனை உச்ச அளவை எட்டுவது வழக்கம். ரஷ்யாவின் இயற்கை எரிவாயு துண்டிக்கப்பட்டிருப்பதால் ஐரோப்பா இம்முறை மிகக் கடினமான பனிக்காலத்தை எதிர்நோக்கியுள்ளது.
ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் பிரான்ஸ் ரஷ்யாவின் எரிவாயுத் தடையினால் பெரியளவு தாக்கத்தைச் சந்திக்கவில்லை. அது தனது 70 வீதமான மின் தேவையை சுமார் 56 அணு மின் உலைகள் மூலம் பெற்றுவருகிறது. ஆனால் அவற்றில் 32 அணு உலைகள் பராமரிப்பு வேலைகள் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடப்பட்டுள்ளன.