ராஜபக்ச குடும்பத்தினர் 400 மில்லியன் பெறுமதியான வீடு கொள்வனவு:

ராஜபக்ச குடும்பத்தினர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பு – கிரிமண்டல மாவத்தையில் 400 மில்லியன் பெறுமதியான காணி மற்றும் வீடு ஒன்றை கொள்வனவு செய்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்க முன்னாள் தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

இலங்கையில் பில்லியன் கணக்கில் ராஜபக்சவினர் சொத்துக்களை சேகரித்துள்ளனர்.இவர்கள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமைக்கான காரணம் என்ன என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.நாடு நெருக்கடியில் சிக்கியுள்ள வேளையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 400 மில்லியன் ரூபா பெறுமதியான வீட்டினை கொள்வனவு செய்துள்ளனர்.அந்தக் குற்றங்களுக்காக அனைத்து ராஜபக்சக்களும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

நாட்டில் இதுவரை பல பில்லியன் கணக்கில் சொத்துக்களை சேகரித்தமை மற்றும் சட்டவிரோத செயல்களில் ராஜபக்சவினர் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளனர்.மலேசியாவின் முன்னாள் பிரதமர் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டதை போன்று இலங்கையில் தவறான முறையில் சொத்துக்களை குவித்த ராஜபக்ச குடும்பத்தின் கோட்டாபய, மகிந்த,பசில்,நாமல் உட்பட அனைத்து ராஜபக்சக்களும் கைது செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.மேலும், காலி முகத்திடலில் அமைதியான முறையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மே 9 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு பொலிஸ் அதிகாரி தேசபந்து தென்னகோன் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போராட்டக்காரர்கள் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று உறுதியளித்த தேசபந்து தென்னகோன், பின்னர் அமைதி ஆர்ப்பாட்டம் மீது தாக்குதல் நடத்த அனுமதித்தமை முற்றிலும் தறவான விடயம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.ராஜபக்ச ஆதரவாளர்களை முதலில் ‘மைனாகோகம மீது தாக்க அனுமதித்தவரும், பின்னர் காலி முகத்திடலின் பிரதான போராட்ட தளத்தை நோக்கி அவர்களை செல்ல அனுமதித்தவரும் தென்னகோன் என்றும் தெரிவித்துள்ளார்.