சூர்யா – சிறுத்தை சிவா படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்.

நடிகர் சூர்யா – இயக்குநர் சிறுத்தை சிவா இணையும் படத்தின் அறிவிப்பு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே வெளியானது. ஆனால் நடிகர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படத்தில் பிசியானார் சிவா. இதன் காரணமாக சூர்யாவின் படத்திற்கான வேலைகள் தொடங்காமல் இருந்தது. இதையடுத்து சமீபத்தில் படத்தைத் தொடங்கும் வேலைகளில் சூர்யா மற்றும் சிறுத்தை சிவா ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் தற்போது சூர்யா – சிவா கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இயக்குநர் சிவா மற்றும் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்துடன் இருக்கும் படத்தை ட்விட்டரில் பகிர்ந்து இதனை உறுதிப்படுத்தியுள்ளார் சூர்யா. அதோடு, “படப்பிடிப்பு தொடங்கியது. உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் தேவை” எனவும் குறிப்பிட்டுள்ளார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தோடு யூ.வி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் கதாநாயகி, மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர, சூர்யா தற்போது இயக்குநர் பாலாவின் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். நந்தா, பிதாமகன் படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக இந்த கூட்டணி இணைந்து பணிபுரிகிறது. ஆகையால் ரசிகர்கள் இந்தப் படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். அதோடு வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் சூர்யா நடிப்பது குறிப்பிடத்தக்கது.