ஜனாதிபதி ரணில் இராணுவ ஆட்சிக்கான அடித்தளத்தை இடுகிறார், சிறிதுங்க குற்றச்சாட்டு

அரசியல் யாப்பை பயன்படுத்தி அதிகாரத்திற்கு வந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இராணுவ ஆட்சியொன்றுக்கான அடித்தளத்தை அமைப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய, பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி ஜனநாயக போராட்டங்களை தடுக்க முயலும் ஜனாதிபதியை பதியில் இருந்து நீக்கும் மிகப்பெரிய வெகுஜன போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் தேர்தலில் படுதோல்வி அடைந்த ஒரு உறுப்பினரைக்கூட தெரிவு செய்துகொள்ள முடியாத ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் அரசியல் அமைப்பை பயன்படுத்தி இன்று ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார். அந்த ஜனாதிபதி ஹிட்லரை போன்று செயற்பட்டு அரசாங்கத்தை அமைக்க அவர் முயற்சிக்கின்றார். அடுத்து வருடம் இவர்கள் மாகாண சபைத் தேர்தலை நடத்தமாட்டார்கள். மொட்டு கட்சி மற்றும் ரணில் விக்ரமசிங்க சூழ்ச்சியின் ஊடாக தேர்தலை ஒத்திவைத்து இராணுவம் மற்றும் பொலிஸ் நிர்வாகத்தை அமைக்க ரணில் ராஜபக்ச முயற்சிக்கின்றனர். ஆகவே இந்த நாட்டின் ஜனநாயகத்தை மதிக்கின்ற இடதுசாரிகள், விவசாயிகள், பெருந்தோட்ட மக்கள் மற்றும் வடக்கின் தமிழ் மக்களையும் உள்ளடக்கிய பலமான அமைப்பு ஒன்றை அமைத்து ரணில்-ராஜபக்ச அரசாங்கத்தை விரட்டுவதற்கு செயற்பட வேண்டியுள்ளது.

2015ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிப்பதாக சர்வதேசத்திற்கு உறுதியளித்தவரே இன்று அந்த சட்டத்தை இன்று பயன்படுத்துகின்றார். மக்களின் எதிர்ப்பை அவர் இதன் மூலம் அடக்கலாம் என அவர் நினைத்தால், ரணில் நீ நினைவில் வைத்துக்கொள் உனக்கு பிழைத்துவிட்டது. என்றார்.