39 அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த முயற்சி !
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதாக உறுதியளித்து அதிகாரத்திற்கு வந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் பெரும்பாலான அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதற்கு முயற்சிகளை முன்னெடுப்பதாக அரச ஊழியர்களை உள்ளடக்கிய தொழிற்சங்கம் ஒன்று குற்றஞ்சாட்டியுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அரச ஊழியர் சங்கத்தின் தலைவர் டி.எம்.டி அபேரத்ன, 39 அரச திணைக்களங்களை தனியார்மயப்படுத்த ஜனாதிபதி முயற்சிப்பதாகவும் அதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போது இல்லை எனவும் வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டின் 39 அரச திணைக்களங்களை தனியார் மயப்படுத்துவதற்கு ரணில் விக்ரமசிங்க முயற்சிகளை முன்னெடுத்துள்ளார். 2001ஆம் ஆண்டு செய்ய முடியாமல் போனதை இன்று செய்வதற்கு முயற்சிக்கின்றார். அதனை செய்வதற்கு பொது மக்கள் ஒருபோதும் இடமளிக்கப்போவது இல்லை. ஒருபுறம் அவ்வாறான ஒரு முயற்சி மறுபுறத்தில் பணியாற்ற முடியாவிடின் அரச பணியாளர்களை வீடு செல்லுமாறு அநுராதபுரத்தில் வைத்து தெரிவிக்கின்றார். அரச ஊழியர்களை குறைக்க வேண்டுமென்பதே ரணில் விக்ரமசிங்கவின் நோக்கம். தொடர்ச்சியாகவே இதனை அவர் அதிகாரத்திற்கு வரும்போதெல்லாம் செய்கின்றார். நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ரணில் விக்ரமசிங்கவிடம் எவ்வித திட்டமும் இல்லை. ஆகவே அவர் நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்ய முயற்கின்றார். என்றார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு மக்கள் ஆணை வழங்கப்படவில்லை எனவும், அவருக்கு அரசாங்கத்தை நடத்திச் செல்வதற்கான உரிமை இல்லை எனவும் குறிப்பிட்டுள்ள அரச ஊழியர் சங்கத்தின் தலைவர் டி.எம்.டி அபேரத்ன விரைவில் நாட்டில் பொதுத் தேர்தல் ஒன்று நடத்தப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.