வேலை செய்ய முடியாத அரச ஊழியர்கள்உடனே வெளியேறவும்,இலவசமாக உணவளிக்க முடியாது-ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

 

கட்சி, நிற, இன, மத பேதமின்றி நாட்டிற்காக அனைவரையும் ஒன்றிணைக்கும் கடந்த காலப் பாடத்தை ஐக்கிய தேசியக் கட்சி கற்றுத் தந்துள்ளதாகவும், எதிர்காலத்திலும் நாட்டிற்காக அனைவரையும் ஒன்றிணைப்பதே தனது நோக்கமெனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணைந்து கொள்ளுமாறு தாம் யாரையும் கோரவில்லை எனவும், நாட்டைக் கட்டியெழுப்பும் பணிகளுக்கு காலதாமதம் செய்யாமல் அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அநுராதபுரம் கோல்டன் மெங்கோ மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற அனுராதபுரம் மாவட்ட அபிவிருத்தி சபையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை மீளாய்வு செய்வதற்கும், எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, “நான் ஜனாதிபதியான பின்னர் முதல் தடவையாக அனுராதபுரத்திற்கு வருகை தந்தேன். இது ஒரு சம்பிரதாயமாகும். புனித தந்த தாதுவின் ஆசிபெற நாம் கண்டிக்குச் செல்கிறோம். மேலும் அனுராதபுரத்திற்கு வருகை தந்து ஜெயஸ்ரீ மஹா போதியின் ஆசிகளைப் பெறுகிறோம்.

அனுராதபுரம், ரஜரட்ட இராச்சியத்தின் தலைநகரம் ஆகும். இங்குதான் நமது ஆரம்பம். 21ம் நூற்றாண்டுக்குப் பொருத்தமான சமுதாயமொன்றை நாம் உருவாக்க வேண்டும்.

அந்தச் செயற்பாடுகளுடன் இங்கு ஆரம்பித்த எமது நாகரிகத்தை நாம் மறக்க முடியாது. அதை மனதில் கொண்டே நாம் முன்னேற வேண்டும். நேற்று நான் புனித இடங்களை வழிபட்டேன்.

அந்த எல்லா இடங்களிலும் மகா சங்கத்தினர் என்னை ஆசிர்வதித்தார்கள். அவர்களுக்கு எனது கௌரவத்தைச் செலுத்த விரும்புகிறேன்.

அநுராதபுரம் மாவட்டத்தைப் பார்க்கும் போது, இந்த மாகாணத்தில் இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும் என்று உணர்கிறேன். அனுராதபுரத்தையும் கண்டியையும் இந்நாட்டின் முக்கிய சுற்றுலா மையமாக மாற்ற வேண்டும். இம்மாகாணத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் அரை நாளில் தங்கள் பயணத்தை முடித்துக் கொள்கின்றனர்.

நைல் பள்ளத்தாக்கிலிருந்து பண்டைய எகிப்திய ராஜ்யங்களைப் பார்வையிட ஒரு வார காலம் ஆகும். ஆனால் இந்த பழமையான இடத்திற்கு வந்து அரை மணி நேரம் கழிப்பதில்லை.

நாம் இதை மாற்ற வேண்டும். அனுராதபுரம் ஒரு வகையில் புனித நகரம். மறுபுறம், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வரலாற்று நகரமாக மாற்றப்பட வேண்டும். இதற்காக அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய வகையில் ஒரு குழுவை நியமிப்பேன்.

பிரான்ஸ் அல்லது வேறு நாட்டிலிருந்து ஆலோசகர்களை வரவழைத்து, இந்த அனுராதபுர நகரத்தை, கலாசார மற்றும் வரலாற்று சிறப்புமிக்க  சுற்றுலா மையமாக எவ்வாறு மாற்றுவது என்பது பற்றி பேசுவோம். இதன் மூலம் அனுராதபுரத்திற்கு புதிய பொருளாதார வழியொன்று கிடைக்கும்.

ஜப்பான், தென் கொரியா, சீனா உள்ளிட்ட  நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் நம் நாட்டிற்கு வருகிறார்கள். மகா விகாரை அகழ்வுப் பணிகள் இன்று முக்கிய பணியாக நடைபெற்று வருகிறது.

மியன்மார், தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா மற்றும் தெற்கு வியட்நாம் ஆகிய நாடுகளில் மகா விகாரை பௌத்தமே காணப்படுகிறது. இந்த நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு அந்த நாடுகளில் இருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் போதுமானதாக அமையும்.

அன்று மேல் மல்வத்து ஓயா திட்டப்பணிகளை ஆரம்பித்தோம். இன்றைய பொருளாதாரச் சிக்கல்களால் அதைத் பிற்போட வேண்டியதாயிற்று. ஓரிரு வருடங்கள் தாமதமானதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

அந்தக் காலத்தில் தொல்பொருள் திணைக்களத்தையும், மற்ற பல்கலைகழகங்களையும் பயன்படுத்தி இதன் ஆரம்பம் எங்கே என்று கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இது மிகவும் முக்கியமானதொரு விடயம்.

இன்று நாட்டு மக்கள் மிகுந்த அழுத்தத்தில் உள்ளனர். வரலாற்றில் இத்தகையதொரு அழுத்தம் ஏற்பட்டதில்லை. அந்த நிலையிலிருந்து நாம் மீள வேண்டும். கடந்த வருடத்தை விட நமது பொருளாதாரம் 8% சதவீதத்தால் குறையும். இது வேகமாக இடம்பெறுகிறது.

அதன் பிரதிபலனை அனைவரும் அனுபவிக்க வேண்டிவரும். இவ்வாறு நிகழும்போது, நாம் அதிலிருந்து எவ்வாறு மீண்டு வருவது என்று சிந்திக்க வேண்டும். இந்தப் பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு முன்னெடுப்பது என்று  பார்க்க வேண்டும்.

நாம் இந்தப் பெரும்போகத்தில் விவசாயத்தை வெற்றிகரமாகச் செய்தால் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும். பெரும்போகத்திற்குத் தேவையான உரங்களை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

அதற்கான உதவிகள் தற்போது கிடைத்துள்ளன. அதேபோன்று உர மானியமும் வழங்கப்படுகிறது. தேவையான விதைகள் வழங்கப்படும். விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான அளவு எரிபொருள் வழங்கும் பணி நடந்து வருகிறது. பெரும்போகத்தை மிகவும் வெற்றிகரமாக மாற்ற விரும்புகிறோம். அப்போது இந்தப் பொருளாதார அழுத்தத்தைக் குறைக்க முடியும்.

விவசாயத்தின் ஆரம்பப் புள்ளியான இந்த ரஜரட்ட, அனுராதபுரம் விவசாய நடவடிக்கைகளுக்கு நாங்கள் பூரண ஆதரவை வழங்குகிறோம். இந்த திட்டத்தை இங்கே ஆரம்பிக்கலாம்.

மேலும் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். ஏனைய விவசாய பயிர்ச்செய்கைக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். தேயிலை, தென்னை, இறப்பர் தொழிற்சாலைகளுக்குத் தேவையான உரங்களை வழங்கி, விவசாயத்தில் முன்னேற வேண்டும்.

அடுத்த வருடம் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க முடியும் என எதிர்பார்க்கிறோம். ஏற்றுமதித் துறையில் இருந்து இப்போது எமக்கு பணம் கிடைக்கிறது. ரூபாவின் பெறுமதி நிலையாகும்போது மீண்டும் மத்திய கிழக்கு நாடுகளின் பணம் நேரடியாக இலங்கைக்கு வந்து சேரும்.

எனவே, இந்த நடவடிக்கைகளின் ஆரம்பம் பெரும்போகமாகும். அதில் நல்ல விளைச்சலைப் பெற கடுமையாக உழைப்போம். இப்போது நமக்கு இருக்கும் ஒரே உதவி நாம்தான்.

வெளியாட்களின் உதவி இப்போது முடிந்துவிட்டது. இந்தியா எங்களுக்கு உதவி செய்துள்ளது, உலக வங்கி மற்றும் பிற நாடுகள் எங்களுக்கு உதவி செய்துள்ளன. இந்த சலுகைகளுடன், விவசாயத்துடன் நமது விவசாயப் புரட்சியைத் தொடங்குவோம்.

இப்பணியில் குறிப்பாக உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. என்ன குறை இருக்கிறது? என்ன செய்ய வேண்டும்? என்பதை உங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். அவர்கள் அது பற்றி பாராளுமன்றத்தில் பேசுவார்கள். இவை அனைத்தையும் ஒன்றிணைத்துக் கொண்டு இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்கலாம்.

மேலும், கீழ்மட்டத்தில் ஏராளமான அரச அதிகாரிகள் உள்ளனர். ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு சுமார் 09 அதிகாரிகள் இருப்பதாக நான் நினைக்கிறேன். அவர்களது கிராம உத்தியோகத்தர்  பிரிவைப் பிரித்து ஒவ்வொருவரும் பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலை செய்ய முடிந்தால், வேலை செய்யுங்கள், முடியாவிட்டால், வீட்டிற்குச் செல்லுங்கள். நாங்கள் வேலை செய்யாமல் பணம் வழங்கத் தயாராக இல்லை. அந்த பொறுப்பை மாவட்ட செயலாளர் ஏற்க வேண்டும். ஏனென்றால் நாங்கள் யாருக்கும் இலவசமாக உணவளிக்க முடியாது. ஏதாவது செய்ய வேண்டும். என்னாலும் இலவசமாக சாப்பிட முடியாது, இந்த நாட்டை முன்னேற்றா விட்டால் நானும் வெளியேற வேண்டும். எனவே முதலில் கிராமத்தில் இருந்து ஆரம்பிக்கலாம்.

நீங்கள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாக இப்பணியைத் தொடருங்கள். இது தொடர்பில் முன்னாள் உறுப்பினர்களும் சிறப்பாக செயற்பட வாய்ப்பு உள்ளது. அனைவரும் இணைந்து இந்தப் பணியை செய்வோம். அரசாங்கத்திடம் இருந்து எல்லாவற்றையும் எதிர்பார்க்கக் கூடாது. இப்போது அரசாங்கத்தின் மூலம் வாழும் காலம் முடிந்துவிட்டது.

இந்தப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு அரசியல்வாதிகள் தீர்வு காண வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். நாம் அதை செய்ய வேண்டும். ஒன்றிணைந்து இந்த அழுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று மக்கள் கேட்டுக் கொள்கின்றனர். அந்த செய்தியை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பழைய அரசியலை கடைப்பிடிப்பதில் அர்த்தமில்லை. பாராளுமன்றத்தில் கட்சிகளை மாற்றினால் நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என மக்கள் நினைக்கவில்லை. அதனால் தான் இந்த இளைஞர்கள் வந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

நான் அதனை அமைதிப் போராட்டம் என்கிறேன். பிற்காலத்தில் மற்றவர்கள் அதை வன்முறைப் போராட்டமாக மாற்றினர். ஏன் இந்தக் குழு இங்கு வந்தது, இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும்.

இதை விட்டுவிடாதீர்கள். தேர்தல் இருக்கிறது என்று ஓடிவிடாதீர்கள். அதற்கு முன்னர், முன் வந்து இந்த வேலையைச் செய்யுங்கள்.

இன்று 03 கட்சிகளை ஆதரித்தவர்கள் இங்கு உள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சிக்கும், மொட்டு கட்சிக்கும்  மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும். ஆனால் நான் இதை உங்களோடு மட்டும் மட்டுப்படுத்தவில்லை. மற்ற கட்சியினரையும் வரச் சொல்லுங்கள்.

ஐ.ம.ச (SJB) மக்களையும் வரச் சொல்லுங்கள். ஜேவிபியையும் வரச் சொல்லுங்கள். அவர்கள் ஒரு பங்கு எடுத்து, நம்மைப் போல ஏக்கருக்கு இரண்டு மடங்கு விளைச்சல் கிடைத்தால், அரசாங்கத்தைத்  தாருங்கள் என்று சொல்லலாம்.

ஆனால் நீங்கள் அதை செய்ய முடியாது என்றால், அது ஒரு விஷயமே இல்லை. அதிகாரம் தேவைப்பட்டால், தங்களால் வேலை செய்ய முடியும் என்பதைக் காட்டுங்கள். கிராம மட்டத்திற்கு வந்து அதனைச் செய்யுங்கள். அனைத்துக் கட்சிகளுடனும் பேசி அனைவரையும் ஒன்றிணைக்க விரும்புகிறேன்.

ஜெயஸ்ரீ மஹா போதி முதல் மிஹிந்தலை வரை உள்ள எட்டுத் தளங்களின் நாயக்க தேரர்களும் இந்தச் செய்தியைத்தான் என்னிடம் சொன்னார்கள். மீண்டும் பழைய நிலைக்குச் செல்வதில் அர்த்தமில்லை.

ஊடகங்களும் நினைவில் கொள்ள வேண்டும். நாம் அனைவரும் ஒன்றாக முன்னேறுவோம் என்று நான் கூற விரும்புகிறேன்.

பிரித்தானியரின் காலத்தின் பின்னர் புனித நகரமான அனுராதபுரத்தைப் பிரித்து புதிய நகரமொன்றை நிர்மாணிப்பதற்கு பிரதமர்  டி.எஸ்.சேனாநாயக்க அவர்கள் தீர்மானித்தார்.

அந்தப் பணி அமைச்சர் சொலமன் வெஸ்ட் டயஸ் பண்டாரநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்தக் கட்சியை உருவாக்கும் போது அதன் தலைவராக டி.எஸ்.சேனாநாயக்காவின் பெயரை S.W.RD. பண்டாரநாயக்கா அவர்கள் முன்மொழிந்தார்.

இன்னொரு எம்.பி வந்து இந்தக் கட்சியை உருவாக்க உதவினார். அவர் டி.ஏ. ராஜபக்ஷ. ஐக்கிய தேசியக் கட்சிதான் அதன் ஆதாரம். இவை அனைத்தும் அந்த மூலத்திலிருந்து வந்தவை. அந்த மூலத்திற்குத் திரும்பும்படி நான் சொல்லவில்லை. ஆனால் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்.

இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட்டனர். சுதந்திரம் பெற்ற பிறகுதான் பிரிந்தனர். இப்போது நமக்கு முன்னால் ஒரு கடினமான காலம் உள்ளது. நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். சுதந்திரம் பெற இடதுசாரி தலைவர்கள் ஒன்று சேர்ந்தனர்.

முதல் எதிர்க்கட்சித் தலைவர் என்.எம். பெரேரா ஆவார். பொன்னம்பலம் போன்ற தமிழ்த் தலைவர்களும் இருந்தனர். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தனர். நாம் அனைவரும் மீண்டும் இணைந்து செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது.

நாம் இந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம். நாம் இணைந்து பணியாற்றும்போது, புதிய அரசியல் கோட்பாடு நமக்குக் கிடைக்கும். பழைய பாதையில் செல்ல முடியாது.

ஒரு புதிய முறைக்கு செல்லலாம். நாம் ஒரு வினயமான அரசியல் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். இன்று தேர்தலுக்குச் சென்று ஆட்சியைப் பெற்றுவிடலாம் என்று யாரும் நினைக்க வேண்டாம்.