வெளவால்ச் சூத்திரம்

- சாம் பிரதீபன் -

ஆடுங்கள்!
இது விசித்திரமானதொரு பல்லாங்குழி.
வென்றவர் பரிகசிக்கப்படும்
வினோத விளையாட்டொன்றில்
தோற்க முடியுமானால்
இந்த ஆட்டம் உங்களுக்கானது ஆடுங்கள்.

பாடிப் பாருங்கள்!
இது வேற்றுக் கிரகமொன்றில்
நடைபெறப்போகும் குரல் தேடல் போட்டி.
அபசுரம் பாடுவோர்க்கு கம்பளம் விரிக்கும்
பிரமாண்ட மேடையொன்றில்
இறுதிவரை சுதிசேர்க்க இயலுமானால்
இந்தப் போட்டி உங்களுக்கானது பாடுங்கள்.

வெளியிட்டுவிடுங்கள்!
இது பாதாளத்தில்
நடந்துகொண்டிருக்கும் புத்தக வெளியீடு
தூசணப் படைப்பாளிக்கு
பொன்னாடை போர்த்தும்
வரலாற்று நிகழ்வொன்றில்
அறவெண்பா எழுதி வெளியிட முடிந்தால்
இந்த வெளி உங்களுக்கானது.
எழுதிவிடுங்கள்.

அரசியல் செய்யுங்கள்!
இது மயானங்களின் மேல்
இயக்கப்படும் ஒரு வர்ணத் தொழிற்சாலை
மனுச வியாபாரிகளுக்கு
வாக்களிக்கும் சிதை நெருப்பில்
மனுசீகம் பேசி வாக்கெடுக்க முடிந்தால்
இந்தப் பிணமேடு உங்களுக்கானது.
தேர்தலில் நில்லுங்கள்.

எனக்கும் வெளவாலுக்கும்
எப்போதும்
உலகம் ஒரே மாதிரி தெரிவதில்லை.
மனிதன் தலைகீழாய் நிற்கிறான்
என்கிறது வெளவால்ச் சூத்திரம்.