நீண்ட போரின் விளைவுகளை ஏற்றுக்கொள்ளத் தயாராகுவோம்! சுதந்திரத்துக்கு கொடுக்கும் விலை என்கிறார் மக்ரோன்

Kumarathasan Karthigesu

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரைக் கடுமையாகக் கண்டித்துள்ள பிரெஞ்சு அதிபர் மக்ரோன், அதன் விளைவாகத் தோன்றியுள்ள “போர்க்காலப் பொருளாதார” நிலையை ஏற்றுக்கொள்ளத் தயாராகுமாறு நாட்டு மக்களைக் கேட்டிருக்கிறார்.

கொடுமையை எதிர்த்து நின்று “சுதந்திரத்துக்காகச் செலுத்துகின்ற விலையை ஏற்றுக்கொள்ளுங்கள்” (“accepter de payer le prix de la liberté”) என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

நாட்டின் தென் கிழக்கே Provence-Alpes-Côte d’Azur இல் அமைந்துள்ள Bormes-les-Mimosas என்ற கிராமத்தை 1944 இல் ஜேர்மனியப் படைகளிடம் இருந்து மீளக் கைப்பற்றியதன் 78 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று அங்கு நடைபெற்றது.

மோசமான காலநிலைக்கு மத்தியில் மக்ரோன் அங்கு அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அதிபர் மக்ரோன் சில நாட்களுக்கு முன்பு உக்ரைன் அதிபருடனும் நேற்று ரஷ்ய அதிபர் புடினுடனும் தொலைபேசியில் பேசியிருந்தார்.போரை சமாதான வழியில் நிறுத்துவதற்கான எந்த சமிக்ஞைகளையும் இரு தலைவர்களும் அச்சமயம் வெளிப்படுத்தியிருக்கவில்லை.

அதன் பிறகு உரையாற்றியிருக்கும் மக்ரோன், உக்ரைன் யுத்தம் நீடிக்கப் போகிறது. விளைவுகள் வரும் குளிர் காலத்தில் மிகக் கடுமையாக இருக்கப் போகிறது என்பதை நினைவு படுத்தினார்.

“எதிர்வரும் காலங்களை ஏற்றுக்கொள்ளவும் நிச்சயமற்ற தன்மைகளை எதிர்க்கவும், சில சமயங்களில் எளிதாக்கவும் ஒற்றுமையாக நமது சுதந்திரம் மற்றும் ஐரோப்பாவின் மதிப்புகளுக்கான விலையைச் செலுத்த ஒப்புக்கொள்ளவும் ஆன்மாவின் வலிமை தேவைப்படும் எங்கள் மக்களைப் பற்றி நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்” என்று அவர் உரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டார்.

பெப்ரவரி 24 இல் ரஷ்யா தோடக்கிய கொடிய தாக்குதல் சில மணி நேரங்களுக்குள் போரை ஐரோப்பிய மண்ணின் எல்லைக்குள் கொண்டுவந்து விட்டது. பழைய பழிவாங்கல் எண்ணத்துடன் ஒரு நாட்டின் இறைமையை மீறி நடத்தப்படுகின்ற இந்த வன்முறைக்கு எதிராகத் தாக்குப் பிடித்து தற்காப்புச் செய்கின்ற உக்ரைன் மக்கள் ஹீரோக்களாக மதிக்கப்படவேண்டியவர்கள் – என்றும் மக்ரோன் குறிப்பிட்டார்.

இதேவேளை, உக்ரைனின் தென் பகுதியில் அமைந்துள்ள ஸேபோறிஷியா அணு மின் ஆலையை (Zaporizhzhia plant) ஐ. நா. பிரதிநிதிகள் பார்வையிடுவதற்கு ரஷ்யா அதிபர் புடின் இணங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.மக்ரோனுடன் நடத்திய தொலைபேசி உரையாடலின் போதே புடின் இதனை ஏற்றுக்கொண்டார் என்று கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது.

ரஷ்யப்படைகளால் கைப்பற்றப்பட்ட பகுதிக்குள் அமைந்தள்ள அந்த அணு உலை எந்த சமயத்திலும் தாக்கப்படக் கூடிய முன்னரங்கில் சிக்கியுள்ளது. படைகளை அங்கிருந்து வெளியேற்றி அங்கு அமைதி வலயம் ஒன்றை உருவாக்க ஒத்துழைக்குமாறு ஐ. நா. சபையும் அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளும் கோரியுள்ளன.