பிரான்ஸின் கோர்சிகா தீவை கடும் புயல் மழை தாக்கிச் சேதங்கள்-மணிக்கு 225 கி. மீ. வேகத்தில் காற்று!6பேர் பலி! பலர் காயம்!!

Kumarathasan Karthigesu

Subscribe Our Youtube!

மத்தியதரைக் கடலில் லா கோர்ஸ் (La Corse) அல்லது கோர்சிகா (Corsica) என்று அழைக்கப்படுகின்ற பிரான்ஸின் கடல்கடந்த நிர்வாகத் தீவைக் கடுமையான புயல் மழை

தாக்கியிருக்கிறது. அதனால் அங்கு  பரவலாக சேதங்கள் ஏற்பட்டுள்ளன. குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு டசினுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 13 வயதுச் சிறுமியும் 72 வயதுப் பெண்ணும் அடங்குகின்றனர். மணிக்கு 225 கிலோ மீற்றர்கள் வேகத்தில் வீசிய பயங்கரக் காற்றினால் மரங்கள் முறிந்ததினாலும் கூரைகள் பிய்த்தெறியப்பட்டதாலுமே உயிரிழப்புகளும் காயங்களும் நேர்ந்துள்ளன. 45 ஆயிரம் வீடுகளுக்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டிருக்கிறது.

இன்று வியாழக்கிழமை காலை முதல் ஆரம்பித்த இடி மின்னல் மழை வெள்ளம் மற்றும் புயல் கோர்சிகாவின் மேற்கே இரண்டு மாவட்டங்களை மூர்க்கமாகத் தாக்கியுள்ளது. தொடர்ந்து இரவும் நாளை வெள்ளிக்கிழமையும் புயல் நீடிக்கலாம் என்பதால் பிரான்ஸின் வானிலை மையம் (Météo France) அங்கு செம்மஞ்சள் எச்சரிக்கையை (orange vigilance) நீடித்துள்ளது.

முந்நூறுக்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டாமன்னா இன்று மாலை கோர்சிகா தீவுக்குச் சென்று நிலைமைகளைப் பார்வையிடவிருந்தார்.

கோடை விடுமுறைக்காக கோர்சிகா தீவின் கடற்கரைகளை நிறைத்திருந்த உல்லாசப் பயணிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடலில் நீய்ச்சல் மற்றும் படகுப் பயணங்களை மேற்கொண்டிருந்தவர்களும் அவசர அவசரமாக மீட்கப்பட்டிருக்கின்றனர்.

மீட்புப் பணிகள், சேத மதிப்பீடு மற்றும் தகவல்களைச் சேகரிப்பதற்காக நெருக்கடிகால சேவைப் பிரிவு ( crisis unit ) ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் எலிசபெத் போர்ன் அறிவித்துள்ளார்.

இதேவேளை, மத்தியதரைக் கடலில் உருவான வெப்ப அனர்த்தம் தற்சமயம் பிரான்ஸின் தெற்குப் பகுதிகளில் கடும் புயல் மழை வெள்ள அனர்த்தங்களை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் கடுமையான ஆலங்கட்டி மழைப் பொழிவும் ஏற்பட்டுள்ளது.