வெளிநாடு வேலை வாய்ப்பு மோசடி. கடும் சட்ட நடவடிக்கை.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் வேலை வாய்ப்பைத் தேடி வெளிநாட்டு செல்வோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், வேலை வாய்ப்பினை பெற்றுத் தருவதாகக் கூறி பணத்தைப் பெற்றுக்கொண்டு, சுற்றுலா வீசாவில் நபர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் ஏமாற்று நடவடிக்கைகளும் இடம்பெறுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, சட்ட ரீதியாக பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் இவ்வாறான மோசடி நடவடிக்கையில் ஈடுபடுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு பணத்திற்காக மக்களை ஏமாற்றும் குறித்த நிறுவனங்கள் மற்றும் நபர்களை கண்டறியும் பொருட்டு விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறான நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது நாட்டின் பிரஜைகள் வெளிநாடுகளுக்கு அதிகளவில் பயணிக்கின்றனர். இந்த நிலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்படாத நிலையில், வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்கான கேள்வி இல்லாத நிலையில் அதாவது வெளிநாட்டில் வேலை ஒன்றை பெற்றுக்கொள்வதற்கான உத்தியோகபூர்வமான உறுதிமொழிகள் எதுவும் இல்லாத நிலையில் சுற்றுலா வீசா  ஊடாக வெளிநாடு செல்பவர்கள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது.

சுற்றுலா வீசாவில் சென்று அவர்களுக்கு வேலை கிடைக்குமானால் பரவாயில்லை எனினும், அங்கு சென்று தொழில் இன்றி, இருக்கும் பணம் வீண்விரமாகும் திட்டமிட்ட மாபியாவில் அல்லது பண வர்த்தகர்களிடம் சிக்கிக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் குறித்து எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அதேபோல் பெண்கள் குறிப்பிட்ட ஒரு நாட்டுக்கு சென்று, பின்னர் அங்கிருந்து வேறு நாடுகளுக்கு சென்று சித்திரவதைகளுக்கு உள்ளாகும்  விடயங்கள் குறித்தும் எமக்கு தகவல்கள் பதிவாகி வருகின்றன.

இவை அனைத்தும் மக்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் செயலின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. சிலர் இதுத் தொடர்பில் அறியாமல் அந்த வலையமைப்பில் சிக்கிக்கொள்கின்றனர். எனினும் சுற்றுலா வீசா ஊடாக தொழிலுக்கு செல்வதை எம்மால் தடுப்பது கடினம். எனினும் சுற்றுலா வீசா ஊடாக தொழில் பெற்றுச் செல்லும் எண்ணத்தில் ஏமாறும் எமது மக்களை பாதுகாக்க நாம் திட்டம் ஒன்றை வகுத்துள்ளோம். குடிவரவு குடியகல்வு திணைக்களம், விமான நிலைய அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் என்பன இணைந்து இரகசிய பொலிஸாரின் உதவியுடன் இதுத் தொடர்பில் செயற்றிட்டம் ஒன்றை ஒருசில தினங்களில் ஆரம்பிக்கவுள்ளோம். இதன் ஊடாக மனித வியாபாரத்தை தடுக்கவும், அதனை மேற்கொள்பவர்களை  கைது செய்யவும், அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் நாம் திட்டமிட்டுள்ளோம். என்றார்

இந்த ஊடக சந்திப்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அமைச்சர், தொழில் வாய்ப்பைப் பெற்று வெளிநாடு செல்லும் மற்றும் தொழில் ஒப்பந்த காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பும் இலங்கையருக்கு விமான நிலையத்தில் உரிய கௌரவம் வழங்கப்படுவதில்லை என்பதோடு அவர்களுக்கு முறையான சேவைகள் வழங்கப்படுவதில்லை என எழும் குற்றச்சாட்டு குறித்தும் அவதானம் செலுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.