இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தானத்தை திட்டமிட்டு நட்டமடையச் செய்ய முயல்கிறார்கள்: சுதந்திர சேவையாளர் சங்கம் குற்றச்சாட்டு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தானத்தை திட்டமிட்டு நட்டமடையச் செய்து அதனை தமக்கு  நெருக்கமான வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவமும், அரசியல்வாதிகளும்  திட்டமிடுவதாக, சுதந்திர சேவையாளர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அந்த சங்கத்தின் இணைச் செயலாளர் பண்டார அரம்பேகும்புர, நாட்டின் தேசிய அடையாளமான பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை விற்பனை செய்ய அனுமதிக்கப்போவது இல்லை என தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உண்மையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அனைத்து ஊழியர்களுக்குமான சம்பளம்,  மேலதிக கொடுப்பனவுகள், போனஸ் உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளுக்கும் ஒரு ரூபாயை விட குறைந்த பணமே செலவாகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? இன்று எண்ணெய் விலையில் ஒரு ரூபாயை குறைத்து ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்காது அனைவரையும் வீட்டுக்கு அனுப்ப முடியும்.

இதன் மூலம் பொது மக்களுக்கு நிவாரணத்தை வழங்க முடியும் இதனையா எதிர்பார்க்கின்றார்கள்? இது இந்த நாட்டின் சொத்து, நாட்டின் தனித்துவம். இதனை வெளிநாட்டுக்கு விற்பனை செய்யப்போகின்றார்களா? ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கு 25 வீத சம்பளம் அதிகரிக்கப்படுமென உறுதியளித்தார்கள். நிர்வாகமே இந்த உறுதிமொழியை தந்தது. எனினும் பெற்றோலிக் கூட்டுத்தாபன பணியாளர்களை பொது மக்கள் மத்தியில் கெட்டவர்களாக காட்டி, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்யப் பார்க்கின்றார்கள். முதுகெலும்புள்ள ஊழியர்களாக நாம் அதனை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

இலாபத்துடன் இதனை நடத்திச் செல்லாமல், அரசாங்கத்தின் தேவை மற்றும் தேவையற்ற நோக்கத்திற்காக நடத்தி, எண்ணெய் விநியோகத்தை மேற்கொண்டு இன்று இந்த கூட்டுத்தாபனம் நட்டமடைந்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தமக்கு நெருக்கமானவர்களுக்கு இதனை வழங்க முயற்சிக்கப்படுகின்றது. எண்ணெயை இறக்குமதி செய்வது முதல் விநியோகம் வரை குறைபாடுகளுடன் ஒரு வலையமைப்பு காணப்படுகின்றது. அரசியல் தலையீடுகள் இன்றி இந்த நிறுவனத்தை நடத்திச் செல்ல முடியுமாயின் இதிலிருந்து மீள்வது அவ்வளவு பெரிய விடயமல்ல. மாதாந்தம் எண்ணெயை இறக்குமதி செய்வதற்கு பற்றாக்குறையாகவுள்ள சுமார் 200 மில்லியன் டொலரை பெற்றுக்கொள்வதற்கான யோசனைகளை நாம் முகாமைத்துவற்கு முன்வைத்தோம், எனினும் அது தொடர்பில் அவதானம் செலுத்தப்படவில்லை.  என்றார்.

இன்று பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நட்டத்திற்கு அரசியல்வாதிகளே பொறுப்புக்கூற வேண்டுமெனவும், ஊழியர்கள் அல்லவெனவும் பண்டார அரம்பேகும்புர வலியுறுத்தியுள்ளார்.