அருட்டும் இருட்டு
- றஜித்தா -
அவள் கனவுப் பயணத்தில் இருந்து
இறங்கிக் கொண்டாள்
ஆனால் இப்போது எங்கே நிற்கிறாள்
என சொல்ல முடியவில்லை
குழப்பத்தில் அவள்.
பாதைகள் மங்கலான
புகைமூட்டம் பருவங்கள் கண்டிராத
பெருங்காற்று மக்கி உக்கிப்போன சுவர் பூச்சு
அதற்குள் தெளிவற்றுப் போன
ஒரு காட்சி பயத்தின் விளிம்பில்
அவள் காலடியில் கிடந்த சுள்ளியை
கையில் எடுத்து
துணிவை தோண்டியெடுக்க முயற்சிக்கிறாள்
சட சடத்துப் பறந்து போன ஆந்தையினால்
அங்கம் அசைந்து நின்றது
நின்ற மூச்சை வலுந்து வரவழைத்தாள்.
எங்கோ தொலைந்து போன
அவள் நம்பிக்கை இழந்து நிற்கிறாள்
நாய்கள் ஊழையிட்ட சத்தம் கேட்டு
சுற்று முற்றும் பார் க்கிறாள்
பேய்கள் நடமாடும்
குச்சொழுங்கைகள் தெரிந்தது
அம்மணமானால் பேய்கள் அண்டாதாம்
யாரோ சொன்னது நினைவில் வந்தது
ஆடையை இறுக்கிப் பிடித்துக்கொண்டாள்
அண்டத்தை நிமிர்ந்து பார்த்தாள்
அருட்டும் இருட்டை விட்டு
அங்குலமாய் அசைந்தாள்
மருட்சி விலகியதாய் ஓர் உணர்வு
அதோ புளியமரச் சந்தியைக் கடக்கிறாள்
பூனையை குறுக்கிட்டு நடக்கிறாள்
இப்போது மொட்டைப் பனைமரத்தில்
குறுகுறுத்த ஆந்தை பறந்து போனது
குச்சொழுங்கை பேய்கள்
ஆட்டத்தை நிறுத்தியது
பெருங்காற்று தலைசாய்து அசைந்தது
ஒளிப்பட்டை சின்னதாய் தெரிந்தது
வண்ணச் சுவருக்குள்
வடிவாய்த் தெரிந்தது காட்சி
இப்போது அவள்
சொர்ப்பனத்தில் கண்டதை தேடி
சோர்விலாது நடக்கிறாள்.