இன்னும் எவ்வளவு தூரம்

- நிரோஷா -

கண்ணும் கண்ணும்

கதை பேசும் அழகு

பெண்ணும் பெண்ணும்

மொழி பேசும் அழகு

புன்னகை சிந்தும்

பூமகள்

பொன்னகை முந்தும்

பொன்மகள்………

கவிதைகள் வடிப்பதும்

இலக்கியங்கள் அவளுக்கு

இலக்கணம் முடிப்பதும்

இன்னும் எவ்வளவு தூரம்

இனிக்க இனிக்க

இதயம் தொடுகின்றதோ

அவ்வளவு தூரம்

இலக்கியங்கள் விற்கப்படும்

விளம்பரங்கள்

விளைச்சல் எடுக்கும்

கூந்தலை வர்ணிப்பதும்

சாந்தத்தை போற்றுவதும்

சார்ந்து நிற்கும்

சோர்வினை தூற்றுவதும்

பாரினில் சாதாரணமாய்

இன்னும் எவ்வளவு தூரம்

இறக்கங்களாய்..இறக்கப்படுமோ

அவ்வளவு தூரம்

அவள் அர்த்தங்கள் அணைந்தே போகும்

கற்புக்கு நிர்ணயம்

கண்ணுக்கு நிர்ணயம்

சொல்லுக்கு நிர்ணயம்

வசதிக்கு நிர்ணயம்

வார்த்தைக்கு நிர்ணயம்

வாழ்வுக்கு நிர்ணயம்

இன்னும் எவ்வளவு தூரமோ

அவ்வளவு தூரம்அவள்

போற்றலுக்கும் நிர்ணயம்

ஆற்றலுக்கு நிராகரிப்பு

முத்தமிழ் காப்பிய

முத்தமிழ் நாயகி

கண்ணகியை காப்பதும்

அன்னைக்கு அன்னையாய்

அன்னை திரேசாவை

ஆழ்ந்து நினைப்பதுவும்

அரசியல் பெண்களை ஆர்ப்பரிப்பதுமாய்

அகிலம் சென்ற வேளை

ஆயுதம் ஏந்தி

அமர்க்களம் புகுந்து

மண் ஆயுதம் காத்த

மாண்புறு பெண்களை

மா காவியமாக்கிய

எங்கள் இனத்தமிழ்

இன்னும்

எவ்வளவு தூரம்

மாண்பேற்றி

மதிச்சுடரேற்றுமோ

அவ்வளவு தூரம்

வெல்வது சொல்லும்

மகளிரின் வீரம் அது

மங்கையின் தீரம்

பிறந்ததற்காய் ….

பெண்ணாய் பிறந்ததற்காய்

தான் கொண்ட நிறத்திற்காய்

அவள் உடைக்காய்

சமூக நடைக்காய் ..

பிறந்துவிட்ட குலத்திற்காய்

இனத்திற்காய்

ஏதிலி என்பதால்

ஏழ்மைக்காய்

புறக்கணிக்கும் உலகம்

இன்னும் எவ்வளவு தூரமோ

அவ்வளவு தூரம்

அவள்

ஆற்றல்கள் படைப்பாள்

ஆச்சரியம் செய்வாள்

சரித்திரம் காப்பாள்

சாதித்தே நிமிர்வாள்.