உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது
என்பதை இத்தால் உங்களுக்கு அறியத்தருகின்றேன்
என்கிறது,
இப்போது என்னைக் கடந்து போன
ஒரு சுழல் காற்று.
முகநூலில் தான்
ஒருவன் எழுந்து
“ஹப்பி பர்த்டே பொண்டாட்டி” என்கிறான்.
மற்றுமொருவன்,
“இதோ விமானத்தில் இங்கிருந்து அங்கு பறக்கப்போகிறேன்” என்கிறான்.
இன்னொருத்தி,
“என் கணவரின் அப்பா
நேற்றுக் காலமானார் நண்பர்களே”
என்று அழுதுவடிக்கும் ஒரு இமோஜி போடுகிறாள்.
மூன்றாமவள்,
“பூக்களுக்கும் தனக்கும் அழகிலே போட்டி”
என்று செல்பி போடுகிறாள்.
மூக்கிலும் வாயிலும்
குழாய்களைப் பொருத்திப் படுத்திருந்து
“நான் நோயுற்றிருக்கிறேன்” என்கிறான்
வைத்தியசாலை முகவரி காட்டியபடி மற்றொருவன்.
Wifi உம் முகநூலும் அறியாமல்
தென்கோடி மூலையொன்றில்
பசுப்பால் கறந்தபடியிருக்கும் தாயொருத்திக்கு
98ம் அகவை நாள் வாழ்த்து சொல்லி
லைக் வாங்கிக் கொள்கிறான் அடுத்தவன்.
இதுவரை எந்த நூலுமே படித்தறியா ஒருவன்
“புத்தக வாசிப்பாளனாய்”
திடீரென தன்னைக் காட்டப்பார்க்கிறான்.
“உலகம் அழியப் போகிறது. சத்தியத்தை நம்புங்கள்”
என்று கொறோனாவை காட்டி
பைபிளோடு அழைக்கிறான் வேறொருவன்.
“தொட்டுக் கும்பிடுங்கள் கைலாயம் போவீர்கள்”
என்று
பெண்ணின் மேற்சட்டை மீதமர்ந்த
கடவுளின் உருவத்தை சொல்லி
விரசம் பேசுகிறான் முகம்தெரியா இன்னொருவன்.
“விருந்துக்கு வாருங்கள்” என்று
படையலை படம்போட்டு
பரிகசிக்கிறாள் நான்காமவள்.
குழந்தை ஒன்றை யாரோஒரு தந்தை
போட்டுத் துவம்சம் செய்யும் காட்சியை
வைரலாக்க படாதபாடு படுகிறான் எவனோ ஒருவன்.
புராதன கோயில்களைக் கண்டால்
முத்திரை பிடித்து ஆங்கிகா அபிநயம் செய்து
ஆடல் அழகி தான் என்கிறாள் ஒருத்தி.
ஒலிவாங்கியோடு நிமிர்ந்தபடி இருந்து
உலகம் முழுவதும் முட்டாள் என்பதுபோல்
உபதேசம் செய்கிறான் ஊடகன் ஒருவன்.
Candy crush விளையாட
இப்போதும் அழைக்கிறான் என் நண்பன் ஒருவன்.
உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது
என்பதை
இத்தால் உங்களுக்கு அறியத்தருகின்றேன்
என்றுவிட்டு கடந்து போகிறது
இப்போது என்னைக் கடந்து போன
ஒரு சுழல் காற்று.
Next Post