2000 நாட்களைத் கடந்து கிளிநொச்சியில் தொடரும் போராட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் தொடர் கவனயீர்ப்பு  போராட்டம் இன்று 2 ஆயிரம் நாட்களை கடந்து செல்கின்றது.

கடத்தப்பட்ட, இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி அவர்களுடைய உறவுகள் கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த காலம் முதல் தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வாறான பின்னணியில் தமக்கான நீதி கிடைக்கவில்லை என தெரிவித்து சர்வதேச நீதியை வேண்டி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் தொடர் போராட்டங்களை ஆரம்பித்திருந்தனர். அவ்வாறு கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று 2,000 நாளை எட்டியுள்ளது.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகள் இராணுவத்திடம் ஒப்படைத்த பிள்ளைகளுக்கு மரண சான்றிதழ் தான் பதில் என்றால் கொலை செய்தவர்கள் யார்?, உங்கள் இராணுவத்தை நம்பிக்கையளித்த பிள்ளைகள் எப்படி காணாமல் ஆக்கப்பட்டனர், கொடுப்பனவுகளை கொடுப்போம் என்று சொல்வது கொலை செய்த கதையை மறைக்கவான, கொலைக்கான டீலால்  நீதி வழங்க முடியுமா?, எங்கள் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது? போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறும் எங்கே எங்கே உறவுகள் எங்கே?, வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும் போன்ற பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.