இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் : இந்தியா மீது சீனா விமர்சனம்

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என இந்தியா மீது சீனா மறைமுக விமர்சனங்களை முன்வைத்துள்ளது.சீனாவின் உளவு கப்பலான யுவான் வாங்-5 வரும் 11-ம் திகதி இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவதாக இருந்தது.நவீன தொழில் நுட்ப ரீதியில் பல்வேறு தகவல்களை சேகரிக்கும் திறன் கொண்ட யுவான் வாங்-5 என்ற உளவு கப்பலை இந்த இலங்கை துறைமுகத்துக்கு சீனா அனுப்ப முடிவு செய்தது.

சீனாவின் தேசிய விண்வெளி ஆய்வு மையத்தால் இக்கப்பல் நிர்வகிக்கப்பட்டு வந்தாலும் ராணுவ ரீதியிலான பல்வேறு பயன்பாடுகளை இந்த கப்பல் கொண்டுள்ளது.நவீன தொழில் நுட்ப ரீதியில் பல்வேறு தகவல்களை சேகரிக்கும் திறன் கொண்டதாகவும் உள்ளதாக கூறப்படுகிறது.11 முதல் 17-ம் திகதி வரை இந்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுக பகுதியில் நிலைநிறுத்தப்பட்டு பல்வேறு தகவல்களை சேகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கிடையில், சீனாவின் உளவுக்கப்பல் இலங்கை துறைமுகப்பகுதிக்கு வருவதை அச்சுறுத்தலாக இந்தியா கருதி வந்தது. இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனித்துவ் வருவதாகவும் இந்தியா தெரிவித்தது. இதனை தொடர்ந்து, உளவு கப்பல் வருகையை ஒத்திவைக்குமாறு சீனாவுக்கு இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், சீன உளவு கப்பல் தங்கள் நாட்டு துறைமுகத்திற்கு வர இலங்கை மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அதிநவீன உளவு கப்பலை அனுமதிக்க இலங்கை மறுத்தது தொடர்பாக சீனா தற்போது கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் கூறுகையில்இ,சில நாடுகள் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்ற பெயரில் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து அந்நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது முழுமையாக நியாயமற்றது என்றார். இந்த விவகாரத்தில் இந்தியாவின் பெயரை தெரிவிக்காத சீன வெளியுறவுத்துறை இந்தியாவை மறைமுகமாக விமர்சித்துள்ளது.