ஒரு கோடி வீடுகளுக்கு தேசிய கொடிகள் வழங்க திட்டம்
தமிழகத்தில் ஒரு கோடி வீடுகளுக்கு தமிழக பா.ஜ. சார்பில் தேசிய கொடிகள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.நாட்டின் சுதந்திர தினம் ஆக.15ல் கொண்டாடப்படுகிறது. தற்போது 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
‘வீடு தோறும் தேசியக் கொடி’ என்ற திட்டத்தின் கீழ் இம்மாதம் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களையும் சுதந்திர தின விழாவில் ஈடுபடுத்தவும் அனைவரின் வீடுகளிலும் தேசிய கொடியை பறக்கவிடவும் தமிழகத்தில் உள்ள 1 கோடி வீடுகளுக்கு தமிழக பா.ஜ. சார்பில் தேசிய கொடிகள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
மேலும் அக்கட்சி சார்பில் சுதந்திர போராட்ட வீரர்களை இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்வதற்காக பள்ளி கல்லுாரிகளில் சுதந்திர தின பேச்சு போட்டி சைக்கிள் பேரணி நடைபயணம் போன்ற நிகழ்ச்சிகளும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.இதேவேளை சமூக வலைதளங்களில் தங்கள் முகப்பு பக்கமாக தேசிய கொடியை அனைவரும் வைக்க வேண்டும்’ என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.அதை ஏற்று தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அக்கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் என அனைவரும் தங்கள் சமூக வலைதளங்களின் முகப்பு பக்கத்தில் தேசிய கொடியை நேற்று முதல் வைத்துள்ளனர்.தமிழக பா.ஜ.வின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தின் முகப்பிலும் தேசிய கொடி வைக்கப்பட்டுள்ளது.