அல்கொய்தா அமைப்பின் தலைவர், அய்மன் அல்-ஜவாஹிரி ட்ரோன் தாக்குதல் மூலம் கொலை

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்

அல்கொய்தா அமைப்பின் தலைவர், அய்மன் அல்-ஜவாஹிரி ட்ரோன் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், தனது வழிகாட்டுதலின் பேரில், சனிக்கிழமை அன்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரின் ஷெர்பூர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பின் மீது ஆளில்லா டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறினார்.வீட்டின் பால்கனியில்  அய்மன் அல் -ஜவாஹிரி  நின்றிருந்த போது, சிஐஏ அமைப்பின் டிரோன் மூலம் இரண்டு முறை ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், ஜவாஹிரி மட்டுமே உயிரிழந்ததாகவும்இ அங்கிருந்த அவரது குடும்பத்தினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதற்கு பின், அந்த அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்த ஜவாஹிரியை அமெரிக்க அரசு தொடர்ந்து தேடி வந்தது. இந்நிலையில், பல மாத திட்டமிடலுக்கு பிறகு இந்த தாக்குதல் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தாகவும், ஜவாஹிரி கொல்லப்பட்டதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அதிபர் பைடன் தெரிவித்துள்ளார். இரட்டை கோபுர தாக்குதலில் ஜவாஹிரிக்கு பெரும் பங்கு இருப்பதாகவும் பைடன் குற்றம்சாட்டினார்.