இன்னும் எவ்வளவு தூரம்…..?

- குணாளினி -

இன்னும் எவ்வளவு தூரம் நாங்கள் ஓட வேண்டும்?

பெண் என்னும் படிமத்துக்காக மட்டும்,

சமூகம் எம்மேல் கழுவி ஊற்றிய

கறுப்பு மையை முற்றாகத் துடைத்து,

ஒரு ஊதாப்பச்சை,

ஒரு ஒளிர் வான் நீலம்,

ஏன், ஒரு வானவில்லைத் தானும் பூசிக்கொண்டு,

தேவையற்ற தளைகள் தெறித்து விழ,

தனித்துவமாக எம் வாழ்வை நாம் வாழ

இன்னும் எவ்வளவு தூரம்…..

இன்னும் எவ்வளவு தூரம் நாங்கள் ஓட வேண்டும்?

புத்தம் புதியதாய்ப் பிஞ்சுகள்

பூமியில் பிறக்கும் தருணத்திலேயே,

பாலினக் கூக்குரலிடும் வர்ணங்கள்

காத்திருக்கின்றன ,

அவர்களை சிறை பிடிப்பதற்காக.

பெண் எனில் ரோஜா வர்ணம்.

பதுமைக்கு அது அழகு.

ஆண் எனில் வான் நீலம்.

அவன் கட்டற்று விரிபவன்.

தேவ ஒளி பெருகும் காலங்களில்

கிறிஸ்மஸ் தாத்தா ஓடி திரிவார்.

ஒரு பெண் பிள்ளையின்

பரிந்துரைக்கப்பட்ட பரிசுக்காக .

பார்பி டால் , பஞ்சுடல் கரடி பொம்மை,

பறக்கும் ஒற்றைக் கொம்புக் குதிரை,

பால் ஊட்டாது விட்டால் பதறி கத்தும்

பாவைப் பிள்ளை,அதனைத் தள்ளவொரு தள்ளுவண்டி.

ஆனால் ஆண் பிள்ளைக்கு

சக்கரங்கள் ,எந்திரங்கள்,

எதிரியை துளைக்க ஒரு துப்பாக்கி,

இயங்கும் வாகனங்கள் உருவாக்க லெகோ;

இவ்விதமாகத் தான்….. இவ்விதமாகத் தான் ….

எதிர்ப்பால் சமமின்மைக்கு முளை போடப்படுகிறது.

நவராத்திரி நாளின் நவதானியங்களைப் போல.

பச்சைகளிம்பு ஊறிய சடங்கு சம்பிரதாய ராட்டினங்கள்

பெண்மீது இழிந்த மாய இழைகளை நூற்று எறியும்.

சமூக எந்திரம் அந்த இழைகளைத்

தளைகளாய் ஆக்கும்.

அவள் வளர வளர தளைகள் இறுகும்.

கால்களைக் கட்டும்.

கழுத்தினை இறுக்கும்.

இவற்றை முளையிலேயே கிள்ளி,

தளையிலா உலகை ஆக்க…..

இன்னும் எவ்வளவு தூரம்…..?

இன்னும் எவ்வளவு தூரம் நாங்கள் ஓட வேண்டும்?

ஆத்திரமுற்ற ஆண் குரலில் அவலமுற்று,

அவன் எறியும் பாத்திரங்கள்

பறக்கும் தட்டாகக் கிளம்ப

அவற்றிற்குத் தப்பி,

பயந்து பதுங்கும் குஞ்சுகளை அணைத்து,

பொழியும் வசைமாரிகளில் குறுகி,

விசும்பும் ஒரு பெண்ணை நீங்கள் அறிந்ததுண்டா?

வாய்த்தர்க்கம் வசதிப்படாது;

வன்முறைக்கு வழிகோலும்.

‘நல்லவன் தான் ; குடிச்சால் கொஞ்சம்

கொன்றோல் குறைவு’

சமூக நீதிபதிகள் தீர்ப்பிட்டு விலகுவர்.

ஆணுக்கு நிகராய் அலுவலக வேலை;

ஆனாலும் அவனது அனுமதி

அனைத்திற்கும் வேண்டும்.

அவளது தொடர்பாடல், சமூக வலைத்தளம்,

அவள் சமைக்கும் அன்றாட உணவு,

அனைத்துக்கும் அனுமதி வேண்டும்.

மீறினால் மின்னல் ,மழை, இடி முழக்கம்,

புயல், பூகம்பம் எதுவும் நிகழலாம்.

‘பிள்ளைகளுக்காக பொறுத்து போறன்’

பொறுத்துப் போதலை அவளின் அணிகலனாக

பூட்டிக் கொள்வாள் தினமும்,

வெறுப்பும் விரக்தியும் வழிய.

நெருப்புக் கங்குகளை உதிர்க்க வல்ல

ராட்சதப் பறவைகளாக பெண்கள் இருந்தும்,

நனைந்த செட்டைகளை உடைய

கோழிக்குஞ்சுகளாக வாழும்

பாசாங்குத்தனத்தில் பெரும் தீ மூட்டியொரு

கலகம் செய்ய…

இருண்ட வீடுகளில் ஒரு விடியல் பூக்க….

இன்னும் எவ்வளவு தூரம்….?

இன்னும் எவ்வளவு தூரம் நாங்கள் ஓட வேண்டும்?

‘எடியேய் சரசு…..’

பாடுபட்டு படிப்பிச்சு,

பட்டம் எடுத்த மகனைப் பார்க்க

நாடு விட்டு நாடு வந்தனான் எல்லோ….

அவன் பாத்திரம் கழுவுறான்.

படுக்கை விரிப்பு மடிக்கிறான் .

உடுப்பு மெஷினிலை போடுறான்.

படுத்தெழும்பிப் பச்சைப்பிள்ளை வீரிட்டுக் கத்தினால்,

பால்மா கரைச்சு கொடுக்கிறான்.

மடிப்பு கலையாத உடுப்போடை

மகாராணி வேலைக்கு போகிறா.

அவ ஃபுல் ரைமாம்.

அவன் பாட் ரைமாம்.

பாவி இதைப் பாக்கத் தானே

பாழும் உயிர் வச்சிருக்கிறன்.

எப்ப சாவோ? விமோசனமோ?

என்ரை கதை கிடக்கட்டும் ,விடு.

அவள் ராணின்ரை மகள் கட்டி,

நாலு வரியம் முடிஞ்சு போச்சு.

விசேஷம் ஏதும் இல்லையாமோ?

இன்னும் ஒண்டு கேட்க வேணும்.

சோதியின்ரை சிவலைப் பெட்டை

டாக்குத்தரை முடிச்சுட்டாளாம்.

சீதனம் எவ்வளவு குடுத்தவை?

இல்லாட்டி கலரைக் காட்டி

அமத்திப் போட்டினமோ?

விஷக்கொடுக்கு வார்த்தைகளை

வீசி எறிந்து வம்பளக்கும்,

விசாலாட்சி மாமி ரகப்

பெண்களிடமிருந்து

பெண்களைக் காப்பாற்ற

இன்னும் எவ்வளவு தூரம்?

இன்னும் எவ்வளவு தூரம் நாங்கள் ஓட வேண்டும்?

பெண் குழந்தை துஷ்பிரயோகம்:

இளம் பெண் வலிந்துரிமை; ஏழு பேர் கைது.

நள்ளிரவில் தாக்கப்பட்ட பேரழகி

பத்திரிகைகள் சுடச்சுட செய்தி கொடுக்கும்,

காலை மாலைத் தேனீருக்குக்

கடிக்க ஒரு வடையைப் போல.

குற்றமிழைத்த மிருகங்கள் தப்பிவிடும்,

பட்டென்று விலகும் செய்தியைப் போல.

அதன் பின்,

பாதி இறந்த பெண்களின் மீது

ஏறி அமர்ந்து

எச்சில் உமிழும் இரக்கமற்ற சமூகம்.

களங்கமுற்றாள் இவள் என்று கெக்கலிக்கும் ,வம்பளக்கும்.

அவர்கள் எழும்பும் தருணமெல்லாம்

தள்ளி விடும் மீளவும்

கற்பிழந்தோர் பட்டியலில் வெதும்பிச் சாக.

கைவிடப்பட்ட பெண்கள், எதிரியின் கையில்

கசக்கி முகரப்படும் பெண்கள் ,

உடலை விற்கும் பெண்கள்,

உயிர்த் துணையை இழந்த கைம்பெண்கள்,

ஆசை வார்த்தை காட்டி

மோசம் செய்யப்படும் பதின்மப் பூக்கள்,

மண மாலைக்கு ஏங்கும் முதிர்கன்னிகள்,

பிணம் ஆவதற்கு முன்னரே

புருஷனின் பெயராலே

பூமிக்கு நரகத்தை வரவழைத்த பெண்கள் என

முடிவிலியாக நீளும் துன்பங்களுக்கு எல்லாம்

முடிவுகட்டி,

காலாவதியான கலாசாரங்கள்

பெண்மீது பூட்டிய

கால் கை விலங்குகளைக் கழற்றி எறிந்து விடுதலையாக

இன்னும் எவ்வளவு தூரம்…?

இன்னும் எவ்வளவு தூரம் நாங்கள் ஓட வேண்டும்?

இன்னும் ஒருத்தி பற்றி ஒரு கதை கூறுவேன்.

எழுபத்திரெண்டு வயதுக்காரி.

என் இதயத்தில் நெருடுவாள் அடிக்கடி.

கீதங்கள் அவள் உலகு;

நாதங்கள் அவள் உயிர் மூச்சு;

ஏழு ஸ்வரங்களும் குதிரைகள் ஆகிய

ஒரு இசைத் தங்கரதத்தை

கம்பீரமாய் ஓட்டிச்சென்ற ஒரு மகாராணி.

குடும்ப வாழ்வினாலாய குருவிக் குஞ்சுகள்,

குதிரைகளை ஓட ஓட விரட்டி விட்டன.

குத்துவிளக்காக ,குலமகளாக,

ஐந்து திரிகளும் ஒளிரத்தான் தான் வந்தாள் அவள்.

அடுத்தடுத்த குழந்தைகள்,

படுத்த படுக்கையில் புருஷனை பெற்ற தந்தை.

ஒவ்வொரு திரியாய் அணைந்தது.

ஒருவரும் அலட்டிக் கொள்ளவில்லை.

ஒற்றைத் திரி …..குடும்பத்துக்கான ஒற்றைத் திரி!

எரிந்து கொண்டே இருந்தது.

இன்று அவள் வளர்த்த

குஞ்சுகளுக்கும் குஞ்சுகள் பிறந்து விட்டன.

நெஞ்சம் எல்லாம் ஒரே ஆசை.

பாடவேண்டும் கீர்த்தனங்கள்.

படிக்க வேண்டும் கர்நாடக சங்கீதம் மிகுதி.

ஆனாலும் நிஜ வாழ்வு

காசற்ற குழந்தை பராமரிப்பாளர்.

ஆசை பேரனுக்கு அவள்தான் இரவு பகல்.

அப்பா போன பிறகு

அம்மாவுக்கு எதிலேயும் ஆர்வம் இல்லை.

சின்னவன் இருக்கிறதால பொழுது கொஞ்சம் போகுது

செல்ல மகள் சொல்லிச்சொல்லி

வேலைக்குப் போவாள்.

நாத வினோதம் கேட்கத் துடிக்கும்

மனதை அடக்கி

நாலுவயது பேரனுக்கு பெட் டைம் ஸ்டோரி

சொல்வாள் அவள்.

இந்தத் தளத்தில் எரியும் பிரச்சினைகளை

திருமண பந்தத்தின் பின்,

கருவிலிருந்து செழித்து வந்த கலையாற்றல்

துருப்பிடிக்கத் தூக்கியெறியப் படுவதை நிறுத்த

இந்தக் காசற்ற குழந்தைப் பராமரிப்பாளர்களைக் காப்பாற்ற

இன்னும் எவ்வளவு தூரம்…

இன்னும் எவ்வளவு தூரம் நாங்கள் ஓட வேண்டும்?

“ஆண் மூலம் அரசாளும்: பெண் மூலம் நிர்மூலம்”.

ஆன்றோர் சொல்லிவைத்தார் அடுக்கு மொழி

என்று சொல்லி

அரும்பு ஒன்றைத் துரும்பு என

தூக்கி வீசுவான் சோதிடன் ஒருவன்,

அவள் கன்னிமை வீணாய்த் தீய.

எல்லாம் சரி

பிள்ளை பொருத்தம் மருந்துக்கும் இல்லை

பரிகாரம் பதினேழு சொல்வான் இன்னொரு சாத்திரி.

சாதகம் பொருந்தாதாம்

மகள் செய்த பாவம்

தீராத்துயர் நெருப்பில் தீய்வர் தாய்தந்தையர்.

இந்தப் பாதகப் பொய்யர்தம் வார்த்தைகளை

மனம் பதைக்காது எப்படிச் சொல்லுவரோ?

சீதனம் ஆதனம் சீர்வரிசை

சேர்க்காத பெண்களும் பாவியரே:

சாதிகள் மாறியே துணை கொண்டால் வெட்டி

சரிக்காது நித்திரை கொள்ள மாட்டார். பல

காததூரங்கள் ஓடிச்சென்று பெண்

கறுப்பு என்றும் குண்டு என்றும் கதையளப்பார்.

மோதிடும் ஆயிரம் பிரச்சனைகள்,

முதிர் கன்னியரை தினம் பிய்த்து உண்ணும்

போதும் இனி பொறுத்தது போதும் என்று

இந்த புற்றுபாம்புகளை விலக்கோமா?

விரிசெவி கொண்டிந்த வேதனை எல்லாம்

கேட்டோம்; விதி எனச் சோரமாட்டோம்.

எரிதழல் கொண்டு வா சோதரி!

இந்த இழி சொல் செயல் எரித்துடுவோம்;

என்று சொல்லி,

ஒவ்வொரு தாயும் மகளும் மாமியும் பாட்டியும்

போர்க்கொடி தூக்கிட

இன்னும் எவ்வளவு தூரம்………?

இன்னும் எவ்வளவு தூரம் நாங்கள் ஓட வேண்டும்?

தாயெனும் தெய்வத்தை வாழ்த்திடுவோம்.

தரணியில் பெண்களை மதித்திடுவோம்

வீணைத் தந்திகளை முறிக்காதீர்.

வயலின் சுரங்களைப் பிரிக்காதீர்

வீராவேசக் கதை பல சொல்லுவார்

வீட்டினிலே பெண்களை மிதித்திடுவார்.

வெண்சோளப் பொரியாய் வார்த்தையெல்லாம்

வெறும் மேடைக்குத் தான் பெண்ணே

வீட்டுக்கு அல்ல.

கண்டோம்; காண்கிறோம்; காண்போம்;

இந்தக் கருத்து முரண்படும் வாய்வீரரை

ஆனால் தாண்டோம் ஒருகோடு

தனிக் கேள்வி தானும் கேட்க துணிவில்லை.

மணி கட்டப் பூனைக்கு யாருமில்லை

மண்டைக்குள் புத்தி பூனைக்கும் இல்லை.

தொடரும் இந்த அவலங்கள்

எமது சமூகத்தில் படர்ந்த சாபக்கேடு.

இந்த வெளி வேடதாரிகளை

வீதியில் வைத்து நாலு கேள்வி கேட்பதற்கு

இன்னும் எவ்வளவு தூரம்,,,,,,,?

இன்னும் எவ்வளவு தூரம் நாங்கள் ஓட வேண்டும்?

போதும்; இனி போதும்;

மரக்கிளைகள் முறிய கூடாது என

மந்திரம் சொல்லிக் கொண்டிருக்கும்

முட்டாள் பறவைகள் அல்ல

எம் சொந்தச் சிறகை நம்பி

வேறொரு கிளைக்கும் பறக்க வல்லோர் நாம்

என்று சொல்லி,

பிற கலாச்சார கிளைகளிலும் பழுக்கும்

தேன் கனியுண்டு திரும்பி வருவோம்.

பெண்ணை கட்டும் சடங்கு சம்பிரதாயங்களை

மீள்பார்வை செய்வோம்.

தீராத் துயரம் தரும் தீர்ப்புகளை

திருத்தி எழுதுவோம்.

புதிய பெண் பிள்ளைகளுக்கான உலகை

எதிர்காலத்திலிருந்து

நிகழ்காலத்துக்கு இழுத்து வருவோம்.

இறந்த காலத்தில் இருந்து அல்ல.

ஓடும் தூரக் கேள்விகளை நிறுத்தி

எழும்பி பறப்போம்.

ஒளி காலும் சிறகுடைப் பறவைகளாக.

இன்னும் எவ்வளவு தூரம்……..?

நிறுத்தங்கள்!

இது ஓடுவதற்கான நேரம் அல்ல.

பறப்பதற்கான தருணம்.