இந்திய அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி.
கடந்த ஆண்டு கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட இங்கிலாந்து-இந்தியா இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் எட்ஜ்பாஸ்டன் நகரில் உள்ள பர்மிங்கம் மைதானத்தில் கடந்த 1-ம் தேதி தொடங்கியது.
இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இந்த டெஸ்ட் தொடரில் முன்னிலையில் இருந்த நிலையில் தொடரை வெல்லும் முனைப்பில் இந்த போட்டியில் இந்திய அணி களமிறங்கியது. இப்போட்டியில் நாணய சுழற்ச்சியில் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ஓட்டங்கள் எடுத்தது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 146 ஓட்டங்களையும், ரவிந்திர ஜடேஜா 104 ஓட்டங்களையும் குவித்தனர். இங்கிலாந்து அணியின் ஆண்டர்சன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 284 ஓட்டங்கள் சேர்த்தது. அந்த அணியின் பேரிஸ்டோவ் அதிகபட்சமாக 106 ஓட்டங்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து 132 ஓட்டங்கள் முன்னிலை பெற்றநிலையில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. ஆனால், இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்து வீச்சால் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து வெற்றிபெற இந்திய அணி 378 ஓட்டங்கள் நிர்ணயித்தது. இதனை தொடர்ந்து 378 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக அலெக்ஸ் லீஸ் மற்றும் ஜாக் க்ரூவ்லி களமிறங்கினர். இரு வீரர்களும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜாக் க்ரூவ்லி 46 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார் . அடுத்துவந்த ஒலிவ் போப் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலெக்ஸ் 56 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார் ஒரு கட்டத்தில் 109 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாறியது. அந்த சூழ்நிலையில் இந்தியாவுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருந்தது.
ஆனால், அடுத்துவந்த ஜோ ரூட் மற்றும் ஜானி பிரிஸ்டோவ் பொறுப்பான மற்றும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் கடந்தனர். 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 259 ஓட்டங்கள் சேர்த்தது. ஜோ ரூட் 76 ஓட்டங்கடனும், பேரிஸ்டோவ் 72 ஓட்டங்கள்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று 5-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜோ ரூட் – பேர்ஸ்டோவ் ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர். இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அபாரமாக விளையாடிய ரூட் டெஸ்ட் அரங்கில் தனது 28-வது சதத்தை பதிவு செய்தார். அவரை தொடர்ந்து பேர்ஸ்டோவ் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 378 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2-2 என்ற கணக்கில் இந்த தொடரை சமன் செய்துள்ளது. ஜோ ரூட் 142 ஓட்டங்களுடனும் பேர்ஸ்டோவ் 114 ஓட்டங்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். இந்த போட்டியில் வெற்றி பெறவில்லை என்றாலும் சமன் செய்தாலே இந்திய அணி கோப்பையை வெல்லும் என எதிர்பார்த்த இந்திய ரசிகர்கள் இந்த தோல்வியினால் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.