மெளனம்

- நிரோஷா -

ஆயுதம் என்றனர்

சம்மதம் என்றனர்

மெளனம்

திறமை என்றனர்

விலகல் என்றனர்

மெளனம்

அன்பு என்றனர்

அலட்சியம் என்றனர்

மெளனம்

அறியாமை என்றனர்

அகங்காரம் என்றனர்

ஆத்மாவின் அடங்கல் என்றனர்

மெளனத்திற்கு எவ்வளவு மொழிகள்

அதன்

கவனத்திற்கு அவ்வளவு விழிகள்

மெளனத்திற்கு

கவர்ச்சி இல்லை

கலகலப்பு இல்லை

கண்டனம் உண்டு

மெளனத்திற்கு

காட்சி இல்லை

காணொளி இல்லை

கதை உண்டு

மெளனத்திற்கு

செலவு இல்லை

சேர்மதி இல்லை

சேதாரம் உண்டு

மெளனத்திற்கு

மோகம் இல்லை

மோதல் இல்லை

மொழி உண்டு

மெளனத்திற்கு

விதி இல்லை

விளம்பரம் இல்லை

வீரியமான விடை உண்டு

கண்ணகி மெளனித்திருந்தால்

கதை கிடைத்திருக்காது

பெண்ணவள் மெளனித்தால்

பெண்ணியம் கிடைக்காது

வேர்கள் மெளனித்தால்

விருட்சங்கள் கிடைக்காது

புரட்சிகள் மெளனித்தால்

உரிமைகள் கிடைக்காது

உரிமைகள் மெளனித்தால்

உயர்வுகள் கிடைக்காது

மொட்டவிழ்ந்து பூக்கையில்

மெட்டவிழ்ந்து வண்டு வந்து

மேலாக ஒலி எழுப்பி

தேன் சொட்டெடுத்துப்பருகையில்

சட்டென்று

சிலிர்க்காமல்

தன்

சட்டமென்று உரைக்காமல்

பூக்களின் மெளனம்

தெளிவாகி தேனாகி

தேகத்தின் மருந்தாகி

தேற்றமாகி

தெரிகிறது

வெட்டப்பட்டு வீழ்ந்தாலும்

கட்டுப்பட்டு மாழ்ந்தாலும்

மண்ணுக்கு மாண்பேற்றும்

மண்புழுக்களின் மெளனம்

விளைநிலத்து விதைகளை

வித்துவமாய் கருவூட்டி

உணவாக்கி உயிராக்கி

உலகாக்கி கொடுக்கிறது

மழையின் மெளனம்

வறட்சியானது

காற்றின் மெளனம்

வெப்பமானது

தெளிவின் மெளனம்

குழப்பமானது

சுவையின் மெளனம்

அருவருப்பானது

சுகந்தத்தின் மெளனம்

துர்நாற்றமானது

சுடரின் மெளனம்

இருளானது

சுவாசத்தின் மெளனம்

மரணமானது

தாகத்தில் வறுமை

அறியாமையானது

பசியில் வறுமை

ஆற்றாமையானது

வறுமையில் மெளனம்

தேவையில்லாதது

புகழில் மெளனம்

புனிதமானது

செல்வத்தில் மெளனம்

செழிப்பானது

பொறுமையில் மெளனம்

பொன்னானது

கோபத்தில் மெளனம்

கோபுரம்

கற்களை பெற்றெடுத்து

விற்பன்ன வியப்பெடுத்து

அற்புதக்கலை தொடுத்து

கற்பனைக்களை தொடுத்து

சிற்பங்களாய்

சிறப்புக்களாய்

சிற்பங்களின் மெளனம்

சொற்பதங்களை விட

வெற்றியானது

இறைவனின் சிற்பம்

அருளாகும்

கலைகளின் சிற்பம்

கதையாகும்

நீதிக்கு சாட்சியாய்

நிதர்சன ஓட்டமாய்

அகிம்சைக்கு அடியாய்

அகிலத்து நடையாய்

ஆடலின் அர்த்தமாய்

திறமையின் திறனாய்

தியானத்தின் திகளாய்

தீர்க்கமுடன் நிறைந்து

வாழ்வாய் வரலாறாய்

வம்சமெல்லாம் தொடரும்

கட்டிக்காத்த நாட்டில் எல்லாம்

தட்டித்தமிழ் பறிக்கையில்

வெட்டிப்பகை இழக்கையில்

கைகட்டி நின்ற நாடெல்லாம்

மெளனமாகி…..மெளனமாகி…..

மெளனமாகவே இருந்து இன்று………..

எட்டித்தமிழ் பார்த்து

முட்டிததமிழ் முழக்க

நாடாளுமன்றங்களில்

நாணகல் ஏற்றுகின்றனர்

உயர்ந்துபோன உலகநாடுகள்

உக்ரைனின் உயிரோட்டமுடன்

எந்த தொடர்பும் எமக்கில்லை

அந்த தொடர்பு நமக்கெதற்கு

அப்படித்தான் நாமிருந்தோம்

எங்களிற்கும் பங்கு உண்டு

பணவீக்கத்திற்கும் பங்கு உண்டு

பணமாய் கட்டுகிறோம்

கட்டணமாய் கட்டுகிறோம்

மெளனமாய்..மெளனமாய்…

நாமும்

உலகப்போரில் பங்கெடுக்கிறோம்

ஆழ்ந்துவிட்ட ஆத்மா

ஆயிரமாயிரம்

அர்த்தங்கள் சொல்லும்

வாழ்ந்த கதை

வீழ்ந்த கதை

எழுந்த கதை

மரணத்தின் மடியில்

மெளனத்தின் மெளனமாய்

மரண வீட்டில்

மா வரலாறு சொல்லும்

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">