நான் பெரும் சத்தமாய் மௌனிக்கிறேன்.நீண்ட மௌனமாய் சத்தமிடுகிறேன்!

- சாம் பிரதீபன் -

நான்

சத்தமாய்

ஒரு மௌனம் செய்கிறேன்

அது கடவுளுக்குப் புரிகிறது.

நான் மௌனமாய்

பெரும் சத்தமிடுகிறேன்

அது கட்டெறும்புக்குப் புரிகிறது.

நான் மௌனமாய்

ஒரு நீண்ட மௌனம் செய்கிறேன்

அது எந்த மனிதனுக்கும் புரிவதாய் இல்லை.

உங்களுக்குத் தெரியுமா?

மௌனம் மிகச் சத்தமானது.

மனிதர்களுக்கு எப்போதும் மௌனம் புரிவதில்லை.

 

மௌனம் என்பது

ஒரு ஆணின் கண்ணீர்.

மௌனம்!

ஆண்டவன் அண்ட கோளத்தின் மேல்

தெளிக்கும் பன்னீர்.

மௌனம்!

அறப் போராளி ஒருவனின் அகிம்சை

மௌனம்

உலகிற்கு வராதவரை

உள்ளுர் முகவரி தெரியாதவரை

கருவுக்குள் இருக்கும் வரை

ஒரு குழந்தை சொல்லும் மொழி.

மௌனம்!

நிராகரிக்கப்படும் ஒருவனின்

ஆன்மக் குமுறல்.

மௌனம்!

குற்றவாளி ஒருவனின்

பச்சாத்தாபம்.

மௌனம்!

பேச்சுரிமை மறுக்கப்பட்ட ஒருவனின்

நியாய வெளி.

மௌனம்!

ஒடுக்கப்படும் ஒருத்தனுக்கான

கடைசிக் கால்வாய்.

மௌனம்!

மாற்றுத் திறனாளி ஒருவனின்

ஊன்றுகோல்.

மௌனம்!

பிச்சைக்காரன் ஒருவன் பாடும்

சங்கீதம்.

அன்புத் தோழர்களே!

நான்

நூறு வெறிறிகளினூடு வந்தவன் அல்ல!

ஆயிரம் தோல்விகளினூடு எழுந்தவன்.

தோல்விகள் எனக்கு சொல்லித் தந்தன

மௌனமாய் சத்தமிடவும்

சத்தமாய் மௌனித்திருக்கவும்.

நான் பெரும் சத்தமாய் மௌனிக்கிறேன்

நீண்ட மௌனமாய் சத்தமிடுகிறேன்

பெரும் சத்தம் எழுப்பும்

என் மௌனத்தையும்

அதீத மௌனமாகும்

என் சத்தத்தையும்

புரிந்து கொண்டவள் ஒருத்தி மட்டும்தான்.

அம்மா!

இப்போதெல்லாம்

நினைவுகளை இழந்துகொண்டிருப்பவள்.

சத்தமில்லாமல் மௌனித்துக்கொண்டிருப்பவள்.

 

பத்து வயதில் பந்தயத்தில் தோற்றேன்.

என் மௌனச் சத்தம்

அம்மாவுக்கு மட்டும் கேட்டது.

பதினாறு வயதில்

பரீட்சையில் தோற்றேன்

என் மௌனச் சத்தம்

அம்மாவுக்கு மட்டும் கேட்டது.

இருபது வயதில்

காதலில் தோற்றேன்

என் மௌனச் சத்தம்

அம்மாவுக்கு மட்டும் கேட்டது.

ஈர் இருபது ஆண்டுகள்

இடைவிடாது தோற்றேன்

எல்லாச் சத்தமும் எல்லா மௌனமும்

அவளுக்கு மட்டுமே கேட்டது.

அன்புத் தோழர்களே!

நான்

நூறு வெறிறிகளினூடு வந்தவன் அல்ல!

ஆயிரம் தோல்விகளினூடு எழுந்தவன்.

தோல்விகள் எனக்கு சொல்லித் தந்தன

மௌனமாய் சத்தமிடவும்

சத்தமாய் மௌனித்திருக்கவும்.

உங்களுக்குத் தெரியுமா?

மௌனம் மிகச் சத்தமானது.

மனிதர்களுக்கு எப்போதும் மௌனம் புரிவதில்லை.

கடலின் ஆழப் பகுதியில்

அலைகள் அடிப்பதில்லை

மனசின் ஆழப் பகுதியில்

சஞ்சலங்கள் எழுவதில்லை

பகுத்தறிவில் மௌனமா

கல்வியில் உச்சம்

பள்ளியறையில் மௌனமா

கலவியில் உச்சம்

புத்தியில் மௌனமா

பக்தியின் உச்சம்

பூம்யில் மௌனமா

சக்தியின் உச்சம்

நிந்தனைக்கு மௌனமா

தியானத்தின் உச்சம்

சிந்தனையில் மௌனமா

ஞானத்தின் உச்சம்

ஊன் உடலில் மௌனமா

உழைப்பின் உச்சம்

நித்திரையில் மௌனமா

களைப்பின் மௌனம்

உங்களுக்குத் தெரியுமா?

மௌனம் மிகச் சத்தமானது.

மனிதர்களுக்கு எப்போதும் மௌனம் புரிவதில்லை.

பேச வேண்டியபோது மௌனமாய் இருக்கிறாயா?

அது மிகப் பெரும் சத்தம்.

நீ எனது நண்பன் அல்ல.

தேவையற்றபோது பேசிக்கொண்டிருக்கிறாயா?

அது மிக நீண்ட மௌனம்.

நீ எனது விருப்புக்குரியவன் அல்ல.

மானுட மீட்சிக்கு உதவாச் சத்தம்

இருந்தென்ன செத்தென்ன.

மனுசீக புரட்சிக்கு உதவா மௌனம்

வாழ்ந்தென்ன வீழ்ந்தென்ன

அநீதி கண்டு நீ

ஆர்ப்பரித்தெழுந்தங்கு

நீதி கேட்டு வீதிக்கு வா தோழனே

அது சத்தமாய் நீ செய்யும் மௌனம்.

நமக்கேன் வீண்வம்பு

நலிவோன் நலியட்டும்

வலியோன் வாழட்டும் என

ஒதுங்கி இருந்து விடுப்புப் பாராது

கொடுப்புப் பல் கடித்துப்

பிறர் ஈனநிலை கண்டு துள்ளி எழு தோழனே!

அது மௌனமாய் நீ எழுப்பும் சத்தம்.

சத்தமாய் மௌனமும்

மௌனமாய் சத்தமும்

உன்னால் செய்ய முடிகிறதா?

இன்று முதல் நீ என் தோழன்.

உங்களுக்குத் தெரியுமா?

மௌனம் மிகச் சத்தமானது.

மனிதர்களுக்கு எப்போதும் மௌனம் புரிவதில்லை.

அன்புத் தோழர்களே!

நான்

நூறு வெறிறிகளினூடு வந்தவன் அல்ல!

ஆயிரம் தோல்விகளினூடு எழுந்தவன்.

தோல்விகள் எனக்கு சொல்லித் தந்தன

மௌனமாய் சத்தமிடவும்

சத்தமாய் மௌனித்திருக்கவும்.

நான் பெரும் சத்தமாய் மௌனிக்கிறேன்

நீண்ட மௌனமாய் சத்தமிடுகிறேன்.