மெளனக்கலை பற்றி கூவி விற்கத் தொடங்கியிருக்கிறோம்.
- சாம் பிரதீபன் -
காலடியில்
கதைகள் கசங்கிக் கிடக்கின்றன.
நாங்கள் அண்ணாந்து பார்த்து
விண்ணிலிருந்து ஓலம் வருகிறதா
என காத்துக்கொண்டிருக்கிறோம்.
அம்மாவின் கூந்தலுக்கு
இனி பூக்கள் கிடையாது என்கிறான் ஒருவன்.
நாங்கள்
தேவதைகளின் கூந்தல் வாசம் பற்றி
விண்வெளி ஆராட்சிக்கு தயாராகிக்கொண்டிருக்கிறோம்.
இங்கே கழுத்துக்கருகில்
கத்தி வைக்கப்பட்டிருக்கிறது,
நாங்கள்
கடவுளரில் வித்தைக்காரன் யாரென
பஞ்சாயத்து வைத்துக்கொண்டிருக்கிறோம்.
பேசாப்பொருள் ஆயிரம் தூக்கில் இடப்படுகிறது
நாங்கள் இப்போதுதான்
மெளனக்கலை பற்றி
கூவி விற்கத் தொடங்கியிருக்கிறோம்.
தேவையற்றபோது பேசிக்கொண்டிருப்பதும்,
தேவையானபோது பேசாதிருப்பதும்
ஒடுக்குமுறையின் வெவ்வேறு வடிவங்கள் தான்.