நிலாக்கிழவி

- பூங்கோதை ஶ்ரீ -

வான முகட்டில்

வட்டமாய் வீடுகட்டி

வா என்றழைத்தும் வராமல்

எட்டிப்பார்த்து ஏளனமாய் சிரிப்பதேனோ?

நிலாக்கிழவியே!

உனைக்காட்டி

சோறூட்டி

நித்தமும் கதையும்

பாட்டுமாய்

பிள்ளைகளை

ஏமாற்றும் அம்மாக்களின்

பிள்ளை நிலா நீ

பௌர்ணமியாய்

வெண் நிலவாய்

பெண்ணினமாய் ஒரு முகமும்

சந்திரனாய் அம்புலியாய்

ஆணினமாய் ஒருமுகமும்

கண்ணாம் பூச்சி

ஆட்டம் போடும்

நிலாக்கிழவியே

வளர்ந்து தேய்ந்து

தேய்ந்து வளர்ந்து

அண்டமெல்லாம் சுற்றிவர

சோர்வில்லையோ உனக்கு

நிலாக்கிழவியே!

இரவிலே உலாவரும்

நிலாப்பெண்ணாய்

கோடி யுகமானாலும்

இளமையாய் இருப்பவளே

யுகம் கடந்த மூப்பபினால்

நீ கிழவியானாயோ?

விண்கலம் ஏறி

விருந்துக்கு வரவா நானும்

எட்டிநின்று ஏளனமாய் சிரிப்பதேனோ

விண்ணைத் தாண்டி

பூமி வந்தால்

விலை பேசி

உலை வைத்திடுவான் மனிதன் என்றா?

பூமியை கூறுபோட்டு

சாமியையும் கூறு போடும் அவன்

உன்னை விட்டுவிடுவனா?

அமுத மழையைப் பொழிந்து

அன்பைக் காட்டும்

அழகுக் கிழவியே

அங்கிருப்பதுதான் உனக்கழகு!