பிடி சோறு!

- பிறேமலதா -

அடிச்சட்டி கறியோட

இடிச்ச சம்பலும்..

பழஞ்சோறும் சேர்த்து

குழைத்தெடுக்கும் …

அந்த விரலிகளில்தான்

அமிழ்து சுரக்கிறதோ ?!

ஒருகவள குழையலை

இரண்டாக்கப் பிரித்து

ஒன்பது ஒன்பது …

உருண்டை செய்வா !

ஒவ்வொருத்தருக்கும்

இவ்விரண்டு சோற்று

உருண்டைகள் போதும் !

திரணைகளும்;

உருண்டைகளும்

அண்ணன் தம்பிகளாம்!

சொல்லிச் சொல்லி

அவ கொடுத்தா;

சோத்துக்கும்தான்

சொந்தம் சேர்த்தா !

போர்க்காலச்

சூழல் ஒன்றில்;

வடிச்செடுத்த

சூடு சோற்றில்….

உப்பிட்டு …

தேசிப்புளியும்

பிழிஞ்சுவிட்டு;

சின்ன வெங்காயம்

பச்சை மிளகாயை

சிறு தோடுகளாய்

அரிஞ்சு போட்டு

பிசைந்தெடுத்து

அவகொடுத்த..

பிடிசோற்றால்

எங்கள் அரைவயிறு

நிறம்பிச்சுது அன்று !

கஞ்சியதான் குடிச்சு

அவ கால் வயித்தை

நிறைச்ச போது ;

நெஞ்சம் கனத்து

நெடும்துயரால்

தொண்டை அடைச்சது!

கால ஓட்டத்தில்..

உதட்டோடு உணவு

ஓட்டாது உண்கின்ற

பகட்டு உணவுமுறை

திகட்டுது இப்போது !

உதட்டிலே அந்தப்

பழஞ்சோற்றின் சுவை

ஒட்டி நின்று திதிக்குது !