நேற்றைய கனவில் அவன் வந்தபடியிருந்தான்
எனக்கு எழுதப்பட்ட நித்திரையின் விதி மூன்று மணி நேரங்கள்!
மனிதர்களுக்கு ஒரு கோப்பை தேனீரும் ஒரு அக்கறையான உரையாடலும் எப்போதும் தேவையாக இருக்கின்றதோ? என எண்ணியபடி நேற்றைய நாளை முடித்துக்கொண்டேன்.
அவன் எப்போதும் கலகலப்புடன் பேசிக்கொள்பவன். நான்கு வருடங்களுக்கு முன்பு ஒருமுறை முதன் முதலாக என்னைப் பார்த்து புன்னகைத்தபோதே அவனுடன் பேச வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் எழுந்தது. மீண்டும் ஒருமுறை என் முன்னே புன்னகைக்க மாட்டார்களா என என் வாழ்நாளில் என்னை ஆர்வப்படுத்திய நான்காவது மனிதன் அவன்.
நத்தானியேல் இப்போது 27 வயது நிரம்பிய, கம்பீரத் தோற்றத்துக்குரிய, சிவந்த தோல்களையுடைய ஒரு வெள்ளைக்கார நண்பன். சொற்ப நேரம் எடுத்துக்கொண்டாலும் அந்த நேரத்திற்குள் அன்போடு மட்டுமே பேசத் தெரிந்த வித்தைக்குச் சொந்தக்காரனாக என் கண்களுக்கு அவன் தெரிந்தான்.
7am in the morning She’s callin’, I’m yawnin’
She’s jarrin’, no stallin’
என்ற ஆங்கிலப் பாடலை அவ்வப்போது நாம் சந்திக்கின்றபோது எமக்குள் பாடி தோள்களை இடித்தபடி பலமுறை சிரித்துக் களித்திருக்கிறோம்.
அவனது கிற்றார் இசையும், குரல் வளமும், வசீகரத் தோற்றமும் மேற்கு லண்டனின் மதுபானக் கூடங்களில் பல இளம் பெண்களை சுண்டி இழுத்ததை நான் நேரடியாக கண்டிருக்கிறேன். அவனது சொந்த இசைக்குழுவிற்கு முகநூலில் மட்டும் 40k ரசிகர்கள்.
வழமையைக் காட்டிலும் இந்த நான்கு வருடத்தில்
மிக அதிகமான நேரம் நத்தாலியேலுடன் உரையாடக் கிடைத்தது நேற்றைக்குத்தான்.
ஒரு கோப்பை தேனீருடன் உட்கார்ந்து அரசியல் பேசினோம். ஆன்மீகம் பேசினோம். கொறோனாவின் கெடுபிடி பேசினோம். இசை பேசினோம். இலக்கியம் பேசினோம். இல்லாமல் போகும் மனித நேய துன்பியல் பேசினோம்.
இரண்டு விடயங்களை தினசரி சரிபார்த்துக்கொண்டால் மனித வாழ்வு அத்தனை அற்புதமானதாக இருக்கும் என்பது எனது நம்பிக்கை.
“அதிகாலை மலச்சிக்கல் இல்லாது விடிய வேண்டும்
அந்திப்பொழுது மனச்சிக்கல் இல்லாது முடிய வேண்டும்”
ஒன்று உடல் சார்ந்தது மற்றையது மனம் சார்ந்தது.
தன் புன்னகையால் என்மீது தாக்குதல் செய்த நத்தானியேலுக்கு இந்த இரண்டிலும் சிக்கல் இருந்திருக்கின்றது என்பதை நான் தெரிந்துகொள்ள எனக்கு நான்கு வருடங்கள் எடுத்திருக்கின்றது.
“மனப் பதட்டம்” என்னும் உளச் சிக்கலால் தன் சிறு வயது முதல் நத்தானியேல் அவதிப்பட்டபடி இருப்பது அப்போது தான் எனக்கு தெரிய வந்தது.
பாடசாலைக் காலத்தில் தனக்கு நடந்த பலவீனப்படுத்தும் கொடுமைகள்(Bullying), தன் நிலைமையை அக்கறையோடு கருத்தில் எடுக்காத பெற்றோர், தானே தன் மனச்சிக்கல் குறித்து அடையாளம் கண்ட அறிகுறிகள் என பல அவனைச் சுற்றி நிகழ்ந்து முடிந்திருக்கின்றன.
“மன அழுத்தம்” வேறு என்பதும் “மனப் பதட்டம்” வேறு என்பதும் எம்மில் பலருக்கும் புரியாத ஒரு இடைவெளி. நத்தானியேல் திரும்ப திரும்ப ஒன்றை அழுத்தமாக சொன்னபடியிருந்தான்.
“எனக்கு மன அழுத்தம் கிடையாது. ஆனால் மனப் பதட்டத்தால் நான் தொடர்ச்சியாக சங்கடப்படுகிறேன்.”
“நிகழ்காலத்தில் இரு”
“அந்தந்தக் கணத்தை முழுமையாக அனுபவி”
என்ற மெய்ஞானக் கூற்றுக்கள், சித்தர்களின் வெறும் வார்த்தைகள் அல்ல. அவை உள நலம் குறித்த பெரும் தத்துவார்த்தச் சொற்றொடர்கள் என்பதை விஞ்ஞானங்கள் தொடர்ச்சியாக நிரூபித்தபடியே இருக்கின்றன.
நடந்து முடிந்த சம்பவங்கள் குறித்த மனதின் எதிர்வினை மன அழுத்தமாகவும், நடக்கப் போகின்ற சம்பவங்கள் குறித்த மனதின் எதிர்வினை மனப்பதட்டமாகவும் மனிதனுக்குள் உள்ளிறங்குகின்றது என்பது உள நலன் குறித்த ஆய்வுகளின் முடிவுகளாக விஞ்ஞானம் பதிவு செய்கிறது.
நிகழ்காலத்தில் இருக்க பெரிதும் சங்கடப்பட்டபடி இருக்கும் நத்தானியேலுக்கு தூக்க மாத்திரை இல்லாவிட்டால் எழுதப்பட்ட நித்திரையின் விதி
பல ஆண்டுகளாக ஓரிரவுக்கு இரு மணி நேரங்கள் தான் என்பது அவன் வலியுடன் பதிவு செய்த அவன் குறித்த உண்மை.
தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு மடிக்கணினி போல் தன் mind ஐ log off செய்யமுடியாது தவித்தபடி இருக்கிறான் அந்த வசீகர இளைஞன்.
“என் குறித்து இதுவரை இத்தனை ஆழமாக நான் இதுவரை யாருடனும் பகிர்ந்து கொண்டது கிடையாது. அதற்கான சந்தர்ப்பமும் இதுவரை எனக்கு வாய்த்தது கிடையாது. மனம் கொஞ்சம் இலேசாக இருப்பது போல் தெரிகிறது”
என்று சொன்னபடி இதுவரை இல்லாத ஒரு நெருக்கத்தோடு என்னை கட்டி அணைத்து நன்றி சொல்லிவிட்டு விடைபெற்றுப் போய்க்கொண்டிருந்தான் புன்னகைக்குள் மனப் பதட்டத்தை மறைத்து வாழும் அந்த இளைஞன்.
மனிதர்களுக்கு ஒரு கோப்பை தேனீரும் ஒரு அக்கறையான உரையாடலும் எப்போதும் தேவையாக இருக்கின்றதோ? என எண்ணியபடி நேற்றைய நாளை முடித்துக்கொண்டேன்.
நித்திரைக்கென்று படுக்கையில் சரிந்தால் ஐந்து நிமிடத்துக்குள் ஆழ்ந்த உறக்கத்துக்குப் போகும் எனக்கு நேற்றைய கனவில் நத்தானியேல் வந்தபடியிருந்தான். நேற்றைய இரவு எனக்கு எழுதப்பட்ட நித்திரையின் விதி மூன்று மணி நேரங்களால் குறைந்துபோயிருந்தது.