அழிந்துவரும் தமிழரின் தொல்லிசை!

- பிறேமலதா பஞ்சாட்சரம் -

தமிழ் இசை என்றதும் நம்மில் பலருக்கு மனக்கண் முன் முதலில் வருவது கர்நாடக சங்கீத இசையும் , தமிழ் திரையிசைப்பாடல்களும் நாட்டுப்புறப் தமிழ் பாடல்களுமே ! இதையும் தாண்டி சிந்திக்கச் சொன்னால் தேவாரம் திருவாசகம் முதலிய திருமுறைகள்தாம் என முடித்து விடுவோம். தமிழரின் இசைக்கருவிகள் கூட இன்று வீணை , தம்பூரா , தவில், புல்லாங்குழல் , மத்தளம் என்ற சொற்ப வட்டத்துள் காட்சிப்படுத்தப் படுகின்றன..

ஆதிக்ககரங்களால் அழிக்கப்பட்டும் திரிக்கப்பட்டும் வருவது தமிழர் தம் வரலாறு மட்டுமல்ல தமிழரின் தென்மை பண்பாடு கலாச்சாரம் மற்றும் அவர்களின் அடையாளம் கூறும் சின்னங்களுமே.

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்”, “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்று பாடியும் கூடியும் வாழ்ந்த தமிழனை அழிக்க நினைத்தோர் சாதிகளாக பிரித்து, தமிழரின் சில இசைக்கருவிகளைக் கூட சாதிக்கு என தள்ளிவைத்து விட்டார்கள்.

இயல் , இசை , நாடகம் என முத்தமிழாக மிளிரும் சிறப்பு செம்மொழியான எம் தமிழ்மொழிக்கு உண்டு. தமிழரின் இசைக்கும் இசைக்கருவிகளுக்கும் இற்றைக்கு 10, 000 ஆண்டுகளுக்கு முன்னரான தொடர்ச்சியான வரலாறு உண்டு. சங்க காலம் தொட்டு  பன்னெடுங்காலமாக  பண்ணோடு இயைத்துரைக்கப்பட்டது  இசைத்தமிழ். தமிழிசைக்கு இலக்கணம் வகுத்த நூல் அகத்தியம், தொல்காப்பியத்துக்கு முன்னரான பழந்தமிழ் இலக்கண நூல்.

இசைத்தமிழைப் பற்றிக் கூறும் சங்க கால நூல்களாகிய அகத்தியம் , பெருநாரை, பெருங்குருகு, முதுநாரை, முதுகுருகு, களரியா விரை, பரிபாடல், சிற்றிசை, பேரிசை, சிற்றிசைச்சிற்றிசை, இசை நுணுக்கம், பேரிசை, யாழ்நூல், பரதம், செயிற்றியம், முறுவல், கூத்துவரி, கூத்தநூல், நுண்ணிசை, குருகு, கலி ஆகிய 20 நூல்களும் அழிந்து போயின.

சங்க காலத்திற்கு பின்வந்த காலப்பகுதி நூல்களான காமவிண்ணிசை, மகிழிசை, குணநூல், சயந்தம், பிந்திய இசை நுணுக்கம், இசைத்தமிழ் 16 படலம், மதிவாணர் நாடகத்தமிழ், பஞ்சபாரதீயம், வியாழமாலை அகவல், பரதசேனாபதீயம், வெண்டாளி, இந்திரகாளியம், பன்னிருபடலம் ஆகிய 13 நூல்களும் ஆழிந்து போன இசைத்தமிழ் நூல்களுக்குள் அடக்கம்.

 

தமிழிசையில் இசைக்கப்படும் இசைக்கருவிகளை தமிழர்கள் இருவகைப்படுத்தி வைத்திருந்தனர். பண்ணுடன் இசைக்கப்படுபவை பண் இசைக்கருவிகள் எனவும் தாளத்துடன் இசைக்கப்படுபவை தாள கருவிகள் எனவும் அழைத்தனர். இவை தவிர இசைக்கருவிகளை தோற் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி, கஞ்சகக் கருவி எனவும்  வகைப்படுத்தி உள்ளனர்

தமிழர்களின் இசைக்கருவிகளில் பல கால ஓட்டத்தில் அழிந்தும் அழிக்கப்பட்டும் விட்டன. அவற்ருள் யாழ், உயிர்த்தூம்பு, குறும்பரந்தூம்பு, பேரிகை குரவைப்பறை, , குறும்பறை, உவகைப்பறை, தொண்டகம், முருகியம், துடி, ஏறங்கோட்பறை, கிணைப்பறையையும் , கண்ணார்குழல் ,வேய்ங்குழல், கொன்றைகுழல் ,தீங்குழல் போன்ற பல இசைக்கருவிகள் இன்றில்லை.

சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் தமிழும் சைவமும் போற்றி வளர்க்கப்பட்ட பொழுது தமிழிசைக்கருவிகளுக்கு சிறப்பிடம் இருந்ததை இன்று உள்ள சங்க தமிழ் நூல்களின் வாயிலாகவும், பக்தி இலக்கிய நூல்களான திருமுறைகளூடாகவும், தொன்மை வாய்ந்த ஆலயக் கல்வெட்டுகள் மூலமாகவும் அறிய முடிகின்றது .

அவ்வகையில் திருமுறைகளில் குறிக்கப்படும் இசைக்கருவிகளில் 75 இசைக்கருவிகள் உள்ளன. ஆயினும் பயன்பாட்டில் உள்ளவை மிகவும் குறைந்த எண்ணிக்கையிலானவையே ஆகும்.

இவை தமிழகத்தில் குறிப்பிடத்தக்க பழமை வாய்ந்த சிவாலயங்களில் சிவபூதகண இசை அல்லது திருக்கயிலாய வாத்திய இசை என அழைக்கப்பட்டு இசைக்கப்பட்டு வரப்படுகின்றன. இவ்விசை ஆண் பெண் இருபாலரினாலும் வயது வித்தியாசமின்றி இசைக்க தடையேதும் இல்லை. சிவ ஆலயங்களில் திருப்பள்ளி எழுச்சி , திருகுடமுழுக்கு , சிவ வழிபாடு ,திரு வீதியுலாநிகழ்வுகளில் மரபு வழியான ஆடலுடன் இசைக்கப்பட்டு வரபடுகின்ற திருக்கயிலாய வாத்திய இசை மரபில் சில வகைகள் உண்டு.

பிரதோஷ காலத்தில் இசைக்கப்படுவது -உருத்திர தாண்டவ இசை தீப ஆராதனையின் பொழுது வாசிக்கப்படுவது-சோடச ஆரத்தி நடை திருவண்ணாமலை கார்த்திகை தீப நிகழ்வில் சாமி வெளியுலா வரும்பொழுது வாசிக்கப்படுவது -அண்ணாமலையார் நடை

திருவையாற்றில் திருநாவுக்கரசு நாயனார் சுவாமிகளுக்கு திருக்கையிலாய காட்சியை இறைவன் அருளிய பொழுது வழக்கப்பட்ட இசைக்கையாக திருவையற்று நடை திகழ்கிறது

ஆலய பூசை நடையின் பொழுது இசைக்கப்படுவது- நிறைவு நடை, சங்கு, கொட்டு, கொம்புதாரை, நெடுந்தாரை, குட்டைத்தாரை ,திருச்சின்னம் , கொக்கரை,பறை உடுக்கை ,வெண்கலக் கிண்ணி, போன்ற தமிழர்களின் பல இசைக்கருவிகளின் அதிர்வலைகள் மனதினை வசியப்படுத்தும் தன்மை மட்டுமன்றி நோய் தீர்க்கும் ஆற்றலும் உண்டு.

தொன்மையும் பெருமையும் வாய்ந்த தொல்லிசை கருவிகளை மீட்டெடுத்து பாதுகாப்பது உலகத்தமிழர்களின் கடமை