FIFA 2022: சவூதி அரேபியாவிடம் ஆர்ஜென்டீனா தோல்வி.

தோஹா லுசெய்ல் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற சி குழுவுக்கான பீபா உலகக் கிண்ண ஆரம்பப் போட்டியில் முன்னாள் உலக சம்பியன் ஆர்ஜன்டீனா 1 – 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் சவூதி அரேபியாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

1994இலில் முதல் தடவையாக உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிச் சுற்றில் விளையாடிய சவூதி அரேபியா முதல் சுற்றில் 4 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியிருந்தது. அப்போது மொரோக்கோ (2 – 1), பெல்ஜியம் (1 – 0) ஆகிய அணிகளை சவூதி அரேபியா வெற்றிகொண்டிருந்தது. நெதர்லாந்திடம் தோல்வி (1 – 2) அடைந்தது.

அதன் பின்னர் உலகக் கிணணப் போட்டி ஒன்றில் சவூதி அரேபியா ஈட்டிய முதலாவது வெற்றி இதுவாகும்.

8 நிமிட இடைவெளியில் ஆர்ஜன்டீனவை அசத்திய சவூதி அரேபியா

இன்றைய  போட்டியின் ஆரம்பத்தில் அணித் தலைவரும் தனது கடைசி உலகக் கிண்ண அத்தியாயத்தில் விளையாடுபவருமான லயனல் மெஸி போட்ட பெனல்டி கோல் மூலம் ஆர்ஜன்டீனா முன்னலை அடைந்த போதிலும் இடைவேளையின் பின்னர் 8 நிமிட இடைவெளியில் 2 கோல்களைப் போட்ட சவூதி அரேபியா முற்றிலும் எதிர்பாராத வகையில் வெற்றியீட்டியது.

 

இந்தப் போட்டியில் ஆர்ஜன்டீனா போட்ட 3 கோல்கள் ஓவ்சைட் நிலையில் இருந்து பெறப்பட்டதாக மத்தியஸ்தரினால் தீர்மானிக்கப்பட்டது தென் அமெரிக்க அணிக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.

லுசெய்ல் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற போட்டியின் 8ஆவது நிமிடத்தில் ஆர்ஜன்டின வீரர் ஹெரி மெகயரை தனது பெனல்டி எல்லைக்குள் வைத்து சவூதி அரேபிய வீரர் ஒருவர் விதிகளுக்கு முரணான வகையில் வீழ்த்தியதால் ஆர்ஜன்டீனாவுக்கு பெனல்டி வழங்கப்பட்டது. லயனல் மெஸி 10ஆவது நிமிடத்தில் பெனல்டியை கோலாக்க ஆர்ஜன்டீனா முன்னிலை அடைந்தது.

3 கோல்கள் ஓவ்சைட் என நிராகரிப்பு

இதனைத் தொடர்ந்து எதிரணியின் எல்லையை ஆக்கிரமித்த ஆர்ஜன்டீனா 13 நிமிட இடைவெளியில் போட்ட 3 கோல்கள் ஓவ்சைட் நிலையில் இருந்து பெறப்பட்டதாக மத்தியஸ்தரினால் நிராகரிக்கப்பட்டது.

இரண்டாவது கோல் வீடியோ உதவி மத்தியஸ்தரின் ஒத்துழைப்புடன் நிராகரிக்கப்பட்டதுடன் மற்றைய 2 ஓவ் சைட்களும் உதவி மத்தியஸ்தரினால் தீர்மானிக்கப்பட்டது.

இடைவேளையின்போது ஆர்ஜன்டீனா 1 – 0 என்ற கோல் அடிப்படையில் முன்னிலையில் இருந்தது.

இடைவேளைக்குப் பின்னர் ஆட்டம் தொடர்ந்த மறுநிமிடமே சவூதி அரேபியா கோல் நிலையை சமப்படுத்தியது.

மத்திய களத்தில் பந்தைப் பெற்றுக்கொண்ட சவூதி அரேபியா வீரர் சாலே அல் ஷெஹ்ரி வேகமாக பந்தை நகர்த்தியவாறு பின்கள வீரர் கிறிஸ்டியன் ரோமீரோவை கடந்து சென்று கோல்காப்பாளர் எமி மார்ட்டினெஸுக்கு இடதுபுறமாக பந்தை கோலினுள் புகுத்தி கோல் நிலையை சமப்படுத்தினார்.

இந்த கோல் போடப்பட்டதும் ஆயிரக்கணக்கான சவூதி அரேபிய இரசிகர்கள் அரங்கமே அதிரும் வகையில் கோஷம் எழுப்பி தமது அணியைப் பாராட்டி உற்சாகப்படுத்தினர்.

ஐந்து நிமிடங்கள் கழித்து ஆர்ஜன்டீன அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

சவூதி அரேபிய முன்கள வீரர் சலிம் அல் தவ்சாரி பந்தை இடதுபுறமாக நகர்த்திச் சென்று பலமாக உதைத்த பந்து ஆர்ஜன்டீன கோல்காப்பாளர் எமி மார்ட்டினெஸில் வலது கை விரல்களை உராய்ந்வாறு கோலின் இடது மேல் முலையில் தஞ்சம் புகுந்தது.

இந்தக் கோல் போடப்பட்டதும் ஆர்ஜன்டீன இரசிகர்கள் நம்பமுடியாதவர்களாக தலையில் கைவத்து அதிர்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்தப் போட்டியில் வெற்றிபெறும் என பெருவாரியாக எதிர்பார்க்கப்பட்ட ஆர்ஜன்டீனா> ஒரு கோல் பின்னிலையில் இருந்து மீண்டுவர வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது. எனினும் அதன் முயற்சிகள் எதுவுமே பலனளிக்காமல் போனது.

குறிப்பாக சவூதி அரேபிய கோல் காப்பாளர் மொஹமத் அலி உவைஸ் அற்புதமாக செயற்பட்டு ஆர்ஜன்டீனா கடைசி நேரத்தில் கோல் போட எடுத்த முயற்சிகளைத் தடுத்து நிறுத்தி தனது அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.