T20 உலகக்கோப்பை: 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை வெற்றி
8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரண்டு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
அதன்படி இன்று நடைபெற்று வரும் முதலாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. இதில் நாணய சுழற்சயில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது . இதையடுத்து முதலி ஆடிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ஓட்டங்களே எடுத்தது. அந்த அணி தரப்பில் குர்பாஸ் 28 ஓட்டங்களும் , உஸ்மான் கானி 27 ஓட்டங்களும் எடுத்தனர்.
இலங்கை அணி தரப்பில் ஹசரங்கா 3 விக்கெட்டும், லஹிரு குமாரா 2 விக்கெட்டும் எடுத்தனர். இதையடுத்து 145 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி ஆடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிசாங்கா 10 ஓட்டங்களும் , குசல் மெண்டிஸ் 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். இதையடுத்து 3வது வரிசையில் களம் இறங்கிய டி சில்வா நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்த அவர் அரைசதம் அடித்து அசத்தினார்.
இறுதியில் இலங்கை அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 148 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக டி சில்வா ஆட்டம் இழக்காமல் 66 ஓட்டங்கள் குவித்தார். ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் முஜீப், ரஷித் கான் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்ததன் மூலம் ஆப்கானிஸ்தான் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு முடிந்து விட்டது.