T20 உலகக்கோப்பை: 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய அணி அணி வெற்றி.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஹோபர்ட்டில் நடந்த 8-வது லீக் ஆட்டத்தில் (பி பிரிவு) முன்னாள் சாம்பியன் மேற்கிந்திய அணி, ஜிம்பாப்வேயை எதிர் கொண்டது. சூப்பர்12 சுற்று வாய்ப்பில் நீடிக்க கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 153 ஓட்டங்கள் சேர்த்தது.

ஒரு கட்டத்தில் 2 விக்கெட்டுக்கு 90 ஓட்டங்களுடன் (12.1 ஓவர்) நல்ல நிலையில் இருந்த மேற்கிந்திய அணி மிடில் வரிசை பேட்ஸ்மேன்களின் சொதப்பலால் பெரிய ஸ்கோரை எட்ட முடியாமல் போய் விட்டது. உடல்நலக்குறைவால் ஓய்வு அளிக்கப்பட்ட பிரன்டன் கிங்குக்கு பதிலாக இடம் பெற்ற ஜான்சன் சார்லஸ் அதிகபட்சமாக 45 ஓட்டங்களும் (36 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), ரோவ்மன் பவெல் 28 ஓட்டங்களும் (21 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். கப்டன் நிகோலஸ் பூரன் (7 ஓட்டம் ), ஷமார் புரூக்ஸ் (0) ஏமாற்றம் அளித்தனர்.

அடுத்து களம் இறங்கிய ஜிம்பாப்வே வீரர்களை , மேற்கிந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் கலங்கடித்தனர். குறிப்பாக அல்ஜாரி ஜோசப் துல்லியமான யார்க்கரில் முக்கிய விக்கெட்டுகளை காலி செய்தார். 64 ஓட்டங்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடிய ஜிம்பாப்வே அணியால் அதன் பிறகு சரிவில் இருந்து மீள முடியவில்லை.

18.2 ஓவர்களில் அந்த அணி 122 ஓட்டங்களில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் மேற்கிந்திய அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முந்தைய ஆட்டத்தின் ஹீரோ சிகந்தர் ராசா 14 ஓட்டங்களில் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார் . அல்ஜாரி ஜோசப் 4 ஓவர்களில் 16 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இது அவரது சிறந்த பந்து வீச்சாகும். 4 பேரையும் போல்டாக்கி கவனத்தை ஈர்த்த அவரே ஆட்டநாயகனாக தேர்வானார். தொடக்க ஆட்டத்தில் ஸ்காட்லாந்திடம் தோற்றிருந்த வெஸ்ட் இண்டீசுக்கு இது முதலாவது வெற்றியாகும். அந்த அணி தனது கடைசி லீக்கில் நாளை அயர்லாந்தை எதிர்கொள்கிறது.