3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆப்கானிஸ்தான் அணி அடுத்த மாதம் இலங்கைக்கு வருகிறது
அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் தற்போது பங்குபற்றிவரும் இலங்கையும் ஆப்கானிஸ்தானும் உலகக் கிண்ண போட்டி முடிவடைந்த பின்னர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளன.
ஐசிசி கிரிக்கெட் உலகக் கிண்ண சுப்பர் லீக் 2023 தொடராக அமையவுள்ள இந்த 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆப்கானிஸ்தான் அணி அடுத்த மாதம் இங்கு வருகை தரவுள்ளது.
இலங்கைக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான இந்தத் தொடரை 2023 பெப்ரவரி மாதம் நடத்துவதற்கு அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தது.
ஆனால், இரண்டு நாடுகளினதும் ஐசிசி நாட்காட்டியில் குறித்துரைக்கப்பட்டுள்ள போட்டி அட்டவணை பிரகாரம் இரண்டு நாடுகளும் இந்தத் தொடரை அடுத்த மாதத்திற்கு மாற்றி அமைத்துக்கொண்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியினர் நவம்பர் 22ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளனர்.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான இந்தத் தொடர் கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
முதலாவது போட்டி நவம்பர் 25ஆம் திகதியும் 2ஆவது போட்டி நவம்பர் 27ஆம் திகதியும் கடைசிப் போட்டி நவம்பர் 30ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.