16 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்குகிறது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2007-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக அமீரகத்தில் கடந்த ஆண்டு நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது.
இந்த நிலையில் 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி நவம்பர் 13-ந்தேதி வரை நடைபெறுகிறது. மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன் உள்பட 7 நகரங்களில் நடக்கும் இந்த போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன. இதில் முதல் சுற்றில் 8 அணிகள் இடம் பெற்றுள்ளன.
அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இலங்கை, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், நமிபியா, ‘பி’ பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்12 சுற்றுக்கு தகுதி பெறும்.
சூப்பர்12 சுற்றில் ஏற்கனவே நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் (குரூப்1), இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம் (குரூப்2) அணிகள் அங்கம் வகிக்கின்றன. இவற்றுடன் முதல் சுற்றில் இருந்து வரும் 4 அணிகளும் இணையும். சூப்பர் 12 சுற்றில் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ள அணிகள் தங்களுக்குள் ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பெறும் அணிகள் அரை இறுதிக்குள் நுழையும்.
அந்த வகையில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தானை வருகிற 23-ந்தேதி மெல்போர்னில் எதிர்கொள்கிறது. இரண்டு ஆட்டங்கள் முதல் சுற்றில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் கீலாங் ஸ்டேடியத்தில் நடக்கின்றன. ஒரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை, நமிபியாவை இலங்கை நேரப்படி காலை 9.30 மணி சந்திக்கிறது.
தரவரிசையில் பின்தங்கியதால் நேரடியாக சூப்பர்12 சுற்றில் கால்பதிக்கும் வாய்ப்பை இழந்து விட்ட இலங்கைக்கு முதல் சுற்றில் பெரிய அளவில் சவால் இருக்காது. அண்மையில் ஆசிய கோப்பையை வென்ற இலங்கை இன்றைய ஆட்டத்தில் எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு அணிகளும் ஏற்கனவே 2021-ம் ஆண்டு உலக கோப்பையில் சந்தித்த ஆட்டத்தில் இலங்கை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து- ஐக்கிய அரபு அமீரகம் (பிற்பகல் 1.30 மணி) மோதுகின்றன. இவ்விரு அணிகளும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதி தலா 4-ல் வெற்றி கண்டுள்ளன. ”கடந்த ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இலங்கை, நமிபியா சூப்பர்12 சுற்றில் ஆடியதால் எங்கள் பிரிவில் எல்லா நெருக்கடியும் அவர்களுக்கு தான். கடந்த ஆண்டை விட இந்த முறை சிறப்பாக தயாராகி இருக்கிறோம் ”என்று நெதர்லாந்து வீரர் காலின் அகெர்மான் குறிப்பிட்டார். இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1, 2 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
இந்த உலக கோப்பை போட்டியில் ஐ.சி.சி. மாற்றி அமைத்த புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படுகிறது. பேட்ஸ்மேன் கேட்ச் ஆகும் போது, அதற்குள் எதிர்முனையில் உள்ள வீரர் பேட்டிங் முனைக்கு ஓடிவந்து விட்டால் அவர் தான் அடுத்த பந்தை முன்பு எதிர்கொள்வார். இனி அப்படி கிடையாது. புதிதாக களம் இறங்கும் வீரர் தான் அடுத்த பந்தை சந்திக்க வேண்டும். அதே சமயம் அந்த வீரர் ஓவரின் கடைசி பந்தில் கேட்ச் ஆனால் இந்த விதிமுறை பொருந்தாது.
குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்காவிட்டால் தாமதிக்கும் நேரத்தை கணக்கில் கொண்டு ஆட்டத்தின் கடைசி பகுதியில் பீல்டிங் அணி எல்லைக்கோடு அருகே நிறுத்தப்படும் ஒரு பீல்டரை உள்வட்டத்திற்குள் கொண்டு வர வேண்டும். இது எதிரணி பேட்ஸ்மேன்கள் பவுண்டரிகள் விரட்ட உதவிகரமாக இருக்கும். உதாரணமாக 19-வது ஓவருக்குள் இன்னிங்ஸ் நேரம் முடிந்து விட்டதால் எஞ்சிய ஒரு ஓவரில் பீல்டிங் அணி இந்த தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும்.
பவுலர் முனையில் உள்ள பேட்ஸ்மேன் பந்துவீசுவதற்கு முன்பே கிரீசை விட்டு சில அடி வெளியேறும் போது பவுலர் ரன்-அவுட் செய்தால் கடுமையான விமர்சனங்கள் கிளம்பும். ‘மன்கட்’ என்று அழைக்கப்படும் இந்த ரன்-அவுட் சர்ச்சைக்கு தீர்வு காணும் வகையில் அதிலும் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறு ரன்-அவுட் செய்வது முன்பு ‘நேர்மையற்ற ஆட்டம்’ என்ற பிரிவில் இடம் பெற்றிருந்தது. அது தற்போது ரன்-அவுட் என்ற விதிமுறைக்கு மாற்றப்பட்டு உள்ளது. எனவே இத்தகைய முறையில் ரன்-அவுட் செய்யும் போது அது அதிகாரபூர்வமாக ரன்-அவுட்டாக எடுத்துக் கொள்ளப்படும்.