முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: வங்காளதேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது நியூசிலாந்து
பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 3-வது லீக்கில் நியூசிலாந்து- வங்காளதேச அணிகள் சந்தித்தன.
முதலில் துடுப்பெடுத்தாடிய வங்காளதேசம் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 137 ஓட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்டது. தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 142 ஓட்டங்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.
விக்கெட் கீப்பர் டிவான் கான்வே 70 ஓட்டங்கள் (51 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசினார். கிளென் பிலிப்ஸ் (23 ஓட்டங்கள் ) அடுத்தடுத்து 2 சிக்சருடன் ஆட்டத்தை முடித்து வைத்தார். வெற்றிக்குரிய சிக்சருக்கு பறந்த பந்து, கேலரியில் உட்கார்ந்து இருந்த 12 வயது சிறுமியின் கண்ணில் பட்டு தாக்கியது. இதனால் பதற்றத்திற்குள்ளான பிலிப்ஸ் ஓடோடி சென்று அந்த சிறுமியிடம் நலம் விசாரித்தார்.
தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோற்றிருந்த நியூசிலாந்துக்கு இது முதலாவது வெற்றியாகும். வங்காளதேசம் சந்தித்த 2-வது தோல்வியாகும். 4-வது லீக்கில் நியூசிலாந்து- பாகிஸ்தான் அணிகள் இன்று மீண்டும் மோதுகின்றன.