உலகளவில் 44 நாடுகளைச் சேர்ந்த 198 இளம் சாதனையாளர்களுக்கு டயானா விருது!
Meiveli Media Team

உலகெங்கும் சமூக மாற்றத்திற்காகப் பங்களித்து வரும் 198 இளம் சாதனையாளர்கள் 2026ஆம் ஆண்டுக்கான புகழ்பெற்ற டயானா விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
பிரித்தானிய இளவரசி டயானாவின் நினைவாக வழங்கப்படும் இந்த விருது விழா, கடந்த நவம்பர் 4ஆம் திகதி இணையவழியில் நடைபெற்றது.
இதில் உலகின் 44 நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர். தமது சமூகங்களில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை உருவாக்குதல், கல்வி மேம்பாடு, சுகாதாரம், சமூக சமத்துவம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு எதிரான செயற்பாடுகள் உள்ளிட்ட துறைகளில் ஆற்றிய பங்களிப்புகளுக்காக இவர்கள் விருதுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டுக்கான விருது பெறுநர்களில் இந்தியாவைச் சேர்ந்த 49 பேரும், நைஜீரியாவைச் சேர்ந்த 25 பேரும், அமெரிக்காவைச் சேர்ந்த 23 பேரும் உள்ளடங்குகின்றனர். மேலும், இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளம் சமூகச் செயற்பாட்டாளர்களும் இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர். விருது நிகழ்வையொட்டி பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹரியும் விருது பெற்ற இளைஞர்களுக்குத் தமது வாழ்த்துச் செய்திகளை அனுப்பியுள்ளனர். 16 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் சமூக மற்றும் மனிதாபிமானப் பணிகளை அங்கீகரிக்கும் இந்த விருது, உலகளாவிய இளம் தலைமுறையினரின் சமூகப் பங்களிப்புகளுக்கான முக்கிய சர்வதேச அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.

