பிரித்தானியாவில் அகதிகளுக்கு 30 ஆண்டுகள் காத்திருப்பு! புதிய குடியேற்றக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு!

Meiveli Media Team


பிரித்தானியாவில் புகலிடம் கோரும் அகதிகள் நிரந்தரக் குடியுரிமையைப் பெறுவதற்கு 30 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய புதிய குடியேற்றத் திட்டம் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் முன்வைத்துள்ள புதிய குடியேற்றச் சீர்திருத்தத்தின் கீழ், சிறிய படகுகள் உள்ளிட்ட முறையற்ற வழிகளில் பிரித்தானியாவுக்குள் நுழையும் அகதிகள் நிரந்தர வதிவிட உரிமையைப் பெறுவதற்கு 30 ஆண்டுகள் வரை காத்திருக்க நேரிடும். சட்டபூர்வமான வழிகளில் வருபவர்களுக்கும் முறையற்ற வழிகளில் வருபவர்களுக்கும் இடையில் வேறுபாட்டை ஏற்படுத்தி, ஆபத்தான கடற்பயணங்களையும் சட்டவிரோதக் குடியேற்றத்தையும் கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

எனினும், ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் உள்ளிட்ட மனிதாபிமான அமைப்புகள் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. குறிப்பாக, பல தசாப்தங்களாக நிரந்தர வதிவிட உரிமையின்றி வாழ வேண்டிய நிலை அகதிகளின் பாதுகாப்பு, குடும்ப வாழ்க்கை மற்றும் சமூக ஒருங்கிணைப்பைப் பாதிக்கும் என ஐ.நா. அகதிகள் முகமை எச்சரித்துள்ளது. மேலும், போர் மற்றும் துன்புறுத்தல்களில் இருந்து தப்பி வருபவர்களுக்கு இத்தகைய நீண்டகாலக் காத்திருப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என மனித உரிமை அமைப்புகளும் சுட்டிக்காட்டியுள்ளன. இந்நிலையில், எல்லைக் கட்டுப்பாட்டை வலுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைக்கும் அகதிகளின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இடையிலான விவாதம் பிரித்தானியாவில் தீவிரமடைந்துள்ளது.