தவணைக்கட்டணம் செலுத்தவில்லை எனக் கூறி வானைக் கடத்த முயன்ற இருவரில் ஒருவர் நானுஓயா பொலிஸாரால் கைது
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

நுவரெலியா – பிளக்பூல் பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வான் ஒன்றை, அதன் உரிமையாளரின் அனுமதியின்றி எடுத்துச் செல்ல முயன்ற இருவரில் ஒருவர் நானுஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தவணைக்கட்டணம் செலுத்தப்படாததால் குறித்த வாகனத்தைக் கையகப்படுத்துவது தொடர்பாக முன்னதாக நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த தரப்புடன் தொடர்புடைய இச்சம்பவத்தில், வானைக் கொண்டுசெல்லும்போது பின்பற்றப்பட்ட சட்ட நடைமுறைகள் குறித்தும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பிளக்பூல் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் பிரதான வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வானை இருவர் எடுத்துச் செல்வதாக நண்பர் ஒருவர் தொலைபேசியில் வழங்கிய தகவலையடுத்து, தான் உடனடியாக அந்த வானைப் பின்தொடர்ந்து சென்றதாக வானின் உரிமையாளரான முகமது அஸ்ரஃப் தெரிவித்தார்.
அவர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதையடுத்து, நுவரெலியா – ஹற்றன் பிரதான வீதியின் பாமர்ஸ்டன் பகுதியில் வைத்து வானுடன் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தனது வாகனத்தைக் கையகப்படுத்துவது தொடர்பாக லீசிங் நிறுவனத்திடமிருந்து எவ்வித அறிவித்தலும் கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்ட அஸ்ரஃப், தனது அனுமதியின்றி வாகனத்தைக் கொண்டு சென்றமை குறித்து உரிய விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, குறித்த வாகனத்தின் தவணைக்கட்டணங்கள் செலுத்தப்படாததால் அதனைக் கையகப்படுத்துவதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து கலந்துரையாட வேண்டும் எனக் கூறி, சம்பந்தப்பட்ட தரப்பினர் நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தமை தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் நானுஓயா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எச்.ஜே.கே.என். விஜேராமவிடம் வினவியபோது, வாகனத்தைக் கையகப்படுத்துவது தொடர்பான முறைப்பாடு பொலிஸாருக்குக் கிடைத்திருந்ததாக உறுதிப்படுத்தினார்.
அங்கு, வாகனத்தின் உரிமையாளருடன் கலந்துரையாடி அவரது சம்மதத்துடன் வாகனத்தைக் கையகப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிவித்த அவர், இருப்பினும் உரிமையாளருக்குத் தெரியப்படுத்தாமல் பூட்டை உடைத்தோ அல்லது வேறு வழியிலோ வாகனத்தைக் கொண்டு செல்வது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வானுடன் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய சந்தேகநபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, நிதியியல் குத்தகை (Financial Leasing) முறையின் கீழ் பெறப்பட்ட வாகனத்திற்கான தவணைக்கட்டணங்களைச் செலுத்தத் தவறும் பட்சத்தில், அவ்வாகனத்தை மீண்டும் கையகப்படுத்துவது தொடர்பான சட்டப்பூர்வ நடைமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
2000 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க நிதியியல் குத்தகைச் சட்டத்தின் 27 மற்றும் 28 ஆம் பிரிவுகளின்படி, வாகனத்தைக் கையகப்படுத்த உரிமையுள்ள ஒரு குத்தகை உரிமையாளர் சட்டப்பூர்வ நடைமுறைகளுக்கு அமைவாகவே வாகனத்தை மீளப் பெற முடியும்.
இதன்போது, வாகனம் இருக்கும் பகுதியிலுள்ள பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு அறிவித்து, அமைதிக்கு பங்கம் ஏற்படுவதைத் தடுப்பதற்காகப் பொலிஸ் உதவியைப் பெறலாம்.
இருப்பினும், வாகனத்தின் பொறுப்பை அமைதியான முறையில் பெற முடியாவிட்டாலோ அல்லது அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டலோ, பலவந்தமாக வாகனத்தைக் கொண்டு செல்வதற்குப் பதிலாக சம்பந்தப்பட்ட மாவட்ட நீதிமன்றத்திடமிருந்து உத்தரவைப் பெறுவதே சட்டப்பூர்வ வழியாகும்.
குத்தகை அடிப்படையில் பெறப்பட்ட வாகனங்களைக் கையகப்படுத்துவது தொடர்பாக இலங்கை மத்திய வங்கியும் இதனை தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது, சட்டப்பூர்வ நிபந்தனைகளின் கீழ் அமைதியான முறையில் பொறுப்பை ஏற்க முடியாத சந்தர்ப்பங்களில் நீதிமன்ற நடவடிக்கைகளையே பின்பற்ற வேண்டும்.
மேலும், அனைத்து வாகன நிதிப் பரிவர்த்தனைகளும் குத்தகை ஒப்பந்தங்கள் அல்ல என்பதால், குறித்த வாகன ஒப்பந்தத்தின் தன்மையைப் பொறுத்தே அதற்கான சட்ட நடைமுறைகள் தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

