தொழில்துறை 5.0 கருப்பொருளின் கீழ் உலக சந்தையை வெல்வதற்கான “i5 | FIVE” தேசிய வேலைத்திட்டம் வெளியீடு!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இலங்கையின் தொழில்துறை அமைப்பில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி, சிறிய, நடுத்தர மற்றும் பாரிய அளவிலான தொழில்முனைவோரை சர்வதேச சந்தையை வெல்லும் ஒரு வலுவான சக்தியாக மாற்றுவதற்கான “i5 | FIVE தொழில்துறை சிறப்புப் பயணம் மற்றும் விருதுகள் 2026” (i5 | FIVE Industry Excellence Journey & Awards 2026) தேசிய உத்திசார் வேலைத்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
தொழில்துறை மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சு மற்றும் இலங்கை தொழில்துறை அபிவிருத்தி சபை (IDB) இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த தேசிய திட்டத்தை வெளியிடும் சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இத்தகவல்கள் வெளியிடப்பட்டன. இந்நிகழ்வானது இன்றைய தினம் (29) கொழும்பிலுள்ள கைத்தொழில் அமைச்சிலேயே நடைபெற்றது.
இச்சந்திப்பில் உரையாற்றிய தொழில்துறை மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்குள் திட்டமிடப்பட்ட பாரிய வேலைத்திட்டத்தின் ஒரு முக்கிய மைல்கல்லாக இந்நாளி்ல் இது ஆரம்பிக்கப்படுவதாகத் தெரிவித்தார். நாட்டின் தொழில்துறை அபிவிருத்திக்கும் தொழில்முனைவோரை உயர்த்துவதற்கும் கடந்த காலத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட தேசிய திட்டம் எதுவும் இருக்கவில்லை எனவும், அரச மற்றும் தனியார் துறைகள், நிதி அமைச்சு, வர்த்தக அமைச்சு மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) போன்ற பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அமைப்புகளை ஒன்றிணைத்து இந்த புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த தேசிய திட்டம் மூன்று முக்கிய தூண்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகிறது. முதலாவது, நிறுவனத்திற்குள் நிர்வாகம் மற்றும் நிதிப் கட்டுப்பாட்டை வலுப்படுத்தும் ‘நிறுவன சிறப்பு’ (Enterprise Excellence) ஆகும். இரண்டாவது, தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் முழுத் துறையின் உற்பத்தித் திறனையும் உயர்த்தும் ‘தொழில்துறை சிறப்பு’ (Industry Excellence) ஆகும். மூன்றாவது, உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளுடன் (Global Value Chains) இணைந்து, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் நிலையான பொருளாதார மாதிரிகளுக்கு தொழில்முனைவோரைத் தயார்படுத்தும் ‘மாற்றத்திற்கான பின்னடைவுத் திறன்’ (Transformative Resilience) ஆகும்.
இவ்விருது விழாவிற்கு விண்ணப்பிக்கும் நிறுவனங்களில் இருந்து 69 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, பல்கலைக்கழக அமைப்பு மற்றும் மேலாண்மை முதுகலை பட்டதாரி நிறுவனம் (PIM) மூலம் ஆய்வுகள் (Case Studies) மற்றும் வீடியோ ஆவணமாக்கல்கள் மேற்கொள்ளப்படும்.
விண்ணப்பிக்கும் ஒவ்வொரு தொழில்முனைவோருக்கும் அவர்களின் தற்போதைய நிலை மற்றும் எதிர்காலப் பாதையை கண்டறிவதற்கான அறிவியல் மதிப்பீட்டு அறிக்கை வழங்கப்படும் என்றும், கடன் வசதிகள், தொழில்நுட்பம், மனித வள மேம்பாடு மற்றும் சர்வதேச சந்தை இணைப்புகளை வழங்க அமைச்சு தயாராக உள்ளதாகவும் பிரதி அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.
‘தொழில்துறை 5.0’ கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விருது விழா 21 பிரதான துறைகளின் கீழ் நடத்தப்பட்டு, சிறிய, நடுத்தர மற்றும் பாரிய அளவிலான வணிகங்களுக்கு 66 துறைசார் விருதுகள், 3 ஒட்டுமொத்த விருதுகள் மற்றும் 3 ‘i5 | FIVE’ சிறப்பு விருதுகள் உட்பட மொத்தம் 69 விருதுகள் வழங்கப்படவுள்ளன.
இலங்கையின் எந்தவொரு மாவட்டத்திலும் பதிவு செய்யப்பட்டு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் இயங்கி வரும் உற்பத்தி நிறுவனங்கள் www.ifive.idb.lk என்ற இணையதளத்தின் மூலம் எவ்வித கட்டணமுமின்றி இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் சான்றளிக்கப்பட்ட ஆவணங்களின் அச்சுப் பிரதியை 2026 நவம்பர் 09 திங்கட்கிழமை மாலை 4.00 மணிக்கு முன் “இயக்குநர் – சந்தைப்படுத்தல் பிரிவு, தொழில்துறை அபிவிருத்தி சபை, இல. 615, காலி வீதி, கட்டுபெத்த, மொரட்டுவை” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இத்தேசிய திட்டத்திற்கு CBL குழுமம், கொமர்ஷல் வங்கி, PIM நிறுவனம் மற்றும் டயலொக் என்டர்பிரைஸ் ஆகிய நிறுவனங்கள் அரச-தனியார் பங்காளிகளாக IDB உடன் கைகோர்த்துள்ளன. இலங்கையின் உற்பத்தித் துறையின் பங்களிப்பை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 20 சதவீதமாக உயர்த்தவும், ஏற்றுமதி வருவாயை 25 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

