அரப்பலாகந்த தோட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனி வீடுகள் அமைக்க பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நடவடிக்கை.
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

களுத்துறை மாவட்டம், அரப்பலாகந்த தோட்டம் லிஸ்கிலன் பிரிவில் மரம் சரிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்ட மக்களை, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேற்றைய தினம் (28.10.2026) நேரில் சென்று பார்வையிட்டார்.
கடந்த திங்கட்கிழமை (26.10.2026) பெய்த கடும் மழை காரணமாக, அரப்பலாகந்த தோட்டம் லிஸ்கிலன் பிரிவில் பாரிய மரமொன்று சரிந்து விழுந்ததில் குடியிருப்புகள் சேதமடைந்ததுடன், பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.
இதன்போது முற்றாகச் சேதமடைந்த 5 வீடுகளில் வசித்த குடும்பங்களை நேரில் சந்தித்த பிரதியமைச்சர், அவர்களின் தற்போதைய நிலைமைகள் மற்றும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்தார்.
இதன்போது, பாதிக்கப்பட்ட ஐந்து குடும்பங்கள் உட்பட, குறித்த தொடர் குடியிருப்பில் வசிக்கும் 19 குடும்பங்களுக்கும் தனித்தனியான வீடுகளை அமைத்துக் கொடுப்பதே பொருத்தமான தீர்வாக அமையும் என பிரதியமைச்சர் தெரிவித்தார்.
இதற்கமைய,
அரசாங்கம் மற்றும் அமைச்சு மட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் உட்பட குறித்த குடியிருப்பில் வசிக்கும் அனைத்து 19 குடும்பங்களுக்கும் தேவையான அத்தியாவசியப் பொருட்களை உடனடியாக வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன்,
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிவாரணங்கள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு, எதிர்கால குடியிருப்பு வசதிகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பிரதியமைச்சர் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வில் தொடாங்கொடை பிரதேச செயலாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், தோட்ட நிர்வாகத்தினர் மற்றும் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

