அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து சுரேன் ராகவன் காரசாரமான விமர்சனம்!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இன்றைய தினம் (28) கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த கட்சியின் உபசெயலாளர் சுரேன் ராகவன், காணாமல்போன 23 கொள்கலன்கள் (Containers) குறித்துக் கண்டறிவதற்கு இன்னும் மூன்று மாத கால அவகாசம் தேவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அத்துடன், வரவிருக்கும் மூன்று போயா தினங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குப் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனதான் என்பதைத் தாங்கள் நன்கறிந்திருந்த போதிலும், அவர்கள் மீது எவ்வித கோபமும் கொள்ளவில்லை எனக் கூறினார்.
அரசாங்கத்தின் சட்டத்தின் ஆட்சி குறித்த வாக்குறுதியை விமர்சித்த சுரேன் ராகவன், அனைவருக்கும் சட்டம் சமமானது என்று ஜனாதிபதியால் இனிமேலும் கூற முடியாது எனத் தெரிவித்தார்.
சிறைச்சாலையில் உள்ள பௌத்த பிக்குகளின் சட்ட நடைமுறைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு, வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் உட்பட ஏனைய பிக்குகள் பகிரங்கமாகச் செல்லும்போது, அவர்களின் துறவற வாழ்க்கைக்குரிய காவி உடையை அணியக்கூடிய வகையில் 48 மணி நேரத்திற்குள் அரசாங்கம் புதிய சட்டத்தைக் கொண்டுவந்ததற்காகத் தமது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
நாட்டின் பொருளாதார மேலாண்மை முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், லீசிங் வசதிகள் மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்கான கடன் வட்டி விகிதங்கள் இன்னமும் அதிகமாகவே வசூலிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டினார்.
நாட்டின் பொருளாதாரம் இவ்வாறானதொரு கடினமான சூழ்நிலையில் இருக்கும்போதே, அமர்ந்து செல்வதற்கான வாகனங்கள் பழுதடைந்துள்ளதால் 1,750 புதிய வாகனங்களைக் கொண்டுவர வேண்டும் என ஜனாதிபதி மூன்று முறை வலியுறுத்திக் கூறியுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
மேலும், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம்’, இந்நாட்டின் வரலாற்றில் உருவாக்கப்படவுள்ள மிகவும் ஆபத்தான மற்றும் ஜனநாயக விரோதமான சட்டமாக மாறவுள்ளது என எச்சரித்த அவர், நாட்டின் நிலக்கரி இருப்புக்கள் முடிவடையும் நிலையை எட்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இறுதியாக, சமீபத்தில் 750 பௌத்த பிக்குகளைச் சந்தித்து அவர்களின் வாழ்வியல் முறைமைகள் குறித்துக் கலந்துரையாடியதாகக் குறிப்பிட்ட உபசெயலாளர் சுரேன் ராகவன், இலங்கையைப் பொறுத்தவரையில் பிக்குகள், சாசனம் மற்றும் அரசு ஆகிய மூன்றும் தனித்தனியானவை அல்ல என்றும், அவை மூன்றும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட ஒரே அங்கமாகும் என்றும் தெரிவித்துத் தனது உரையை நிறைவு செய்தார்.

