வளிமண்டலவியல் திணைக்களத்தின் விசேட அறிக்கை: மீன்பிடி மற்றும் கடற்படை சமூகம் அவதானத்துடன் செயற்படக் கோரிக்கை

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இலங்கைக்கு அருகில் காணப்படும் தாழ் அமுக்க மண்டலம் தற்போது நாட்டின் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக வானிலை அவதானிப்பு மையத்தின் கணிப்பீட்டு பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இன்றைய நாளிலும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான மேகமூட்டத்துடன் கூடிய மழை நிலவுவதுடன், குறிப்பாக மேல், சபரகமுவ, மத்திய, வடமேற்கு, தெற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக மாலையிலோ அல்லது இரவிலோ நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை தொடரும் சாத்தியம் உள்ளதோடு, மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றரைத் தாண்டிய கனமழை பதிவாகலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய வானிலை மாற்றங்கள் காரணமாக பொதுமக்கள் அனைவரும் இது குறித்து விசேட கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்த வளிமண்டலவியல் முறைமையின் தாக்கம் இன்றைய நாள் முழுவதும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதோடு, நாளைய நாள் தொடக்கத்திலும் இந்த நிலை தொடரக்கூடும் என மெரில் மெண்டிஸ் மேலும் தெரிவித்தார்.

கடற்பிரதேசங்களைப் பொறுத்தவரை, குறிப்பாக மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு கடல் பகுதிகளிலும் இடைக்கிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்பதால், மீனவர்களும் கடற்படை சமூகத்தினரும் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என மீண்டும் நினைவூட்டப்படுகின்றது.

மேலும், இந்நாட்களில் இலங்கையை அண்மித்த பகுதிகளில் அயனஅயல் இணைப்பு வலயம் (Intertropical Convergence Zone) தீவிரமடைந்துள்ளதால், எதிர்கால வானிலை அறிவிப்புகள் தொடர்பில் பொதுமக்கள் அனைவரும் விசேட கவனத்தை செலுத்த வேண்டுமென வானிலை அவதானிப்பு மையத்தின் கணிப்பீட்டு பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.