ஷிரந்தி ராஜபக்ஷவை ஒக்டோபர் 13இல் முன்னிலையாகுமாறு நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு அறிவிப்பு!சிறப்பு வழியில் நாட்டிற்கு வருகை

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான திருமதி ஷிரந்தி ராஜபக்ஷவை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மேற்கொள்ளப்பட்டு வரும் நிதிசார் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி மருத்துவச் சிகிச்சை பெறுவதற்காகச் சிங்கப்பூர் சென்றிருந்த திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ, நேற்று இரவு மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

விமான நிலையத்தை வந்தடைந்த அவர், முக்கிய பிரமுகர்களுக்கான சிறப்பு வசதியான ‘கோல்ட் ரூட்’ (Gold Route) முனையத்தைப் பயன்படுத்தி வெளியேறியுள்ளார்.

முன்னதாக, பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் அளிக்குமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தம்மைப் பொலிஸார் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முன் பிணை மனுவொன்றையும் தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் முதல் பெண்மணியான ஷிரந்தி ராஜபக்ஷவிடம் ‘சிரிலிய சவிய’ நிதியத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் அது தொடர்பான கணக்கு வழக்குகள் குறித்தே நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பிரதானமாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதற்கமைய, எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி அவர் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படவுள்ள அதேவேளை, அவர் தாக்கல் செய்துள்ள முன் பிணை மனு மீதான நீதிமன்றின் தீர்மானமும் எதிர்பார்க்கப்படுகிறது.