வடமராட்சியில் வெளிநாட்டவர் – ஈழத்துப் பெண் திருமணம்; மாட்டு வண்டியில் உலா வந்த தம்பதி!

Meiveli Media Team

யாழ்ப்பாணம் – வடமராட்சிப் பகுதியில் வெளிநாட்டு பிரஜையொருவர், ஈழத்துப் பெண்ணொருவரை திருமணம் செய்து, தமிழர்களின் பாரம்பரிய முறையில் மாட்டு வண்டியில் அழைத்துச் சென்ற காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது. சம்பவம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவருக்கும் வெளிநாட்டைச் சேர்ந்த ஆணொருவருக்கும் திருமணம் இடம்பெற்றுள்ளது. திருமணத்தையடுத்து, புதுமணத் தம்பதியினர் இருவரும் தமிழர்களின் பாரம்பரிய கலாசார உடைகளை அணிந்த நிலையில், அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் பயணித்துள்ளனர். வடமராட்சிப் பகுதியின் வீதிகளில் மாட்டு வண்டியில் தம்பதியினர் பயணித்த காட்சிகளே தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளன. தமிழர்களின் பாரம்பரிய திருமணச் சடங்குகள் மற்றும் கிராமிய வாழ்க்கை முறையை நினைவூட்டும் வகையில் இந்த பயணம் அமைந்துள்ளதாகவும், காணொளியைப் பார்த்த பலரும் சமூக வலைத்தளங்களில் தமது கருத்துக்களைப் பகிர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, நவீன  ஆடம்பர திருமண நிகழ்வுகளுக்கு மாறாக, மாட்டு வண்டியை பயன்படுத்தி புதுமணத் தம்பதியினர் அழைத்துச் செல்லப்பட்டமை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. எனினும், குறித்த தம்பதியினரின் பெயர்இ திருமணம் இடம்பெற்ற திகதி மற்றும் திருமண நிகழ்வு தொடர்பான மேலதிக விபரங்கள் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. வெளிநாட்டு பிரஜைக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் இடையிலான திருமணம் சட்டரீதியாக பதிவு செய்யப்பட்டதா என்பது தொடர்பான தகவலும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இதேவேளை, இலங்கையில் வெளிநாட்டு பிரஜையும் இலங்கைப் பிரஜையும் திருமணம் செய்வதற்கு உரிய ஆவணங்கள் மற்றும் சட்ட நடைமுறைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், வடமராட்சியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த திருமணமும், அதனைத் தொடர்ந்து மாட்டு வண்டியில் புதுமணத் தம்பதியினர் பயணித்த காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பேசுபொருளாகி வருகின்றன.