அனுர அரசாங்கத்தின் கீழ் சட்டமும் நீதியும் பாகுபாடாகவே செயற்படுத்தப்படுகிறது: கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா குற்றச்சாட்டு!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

உலக நாடுகளின் தலைவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள இச்சந்தர்ப்பத்தில், நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மாவட்டங்களுக்குச் சென்று அரசியல் பணிகளில் மட்டுமே ஈடுபட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா குற்றம் சுமத்தியுள்ளார்.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் இன்று (28) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், உலகத்துடன் முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின், இலங்கை வலுவான சர்வதேச உறவுகளைக் கட்டியெழுப்ப வேண்டும் எனவும், அதற்கு ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச மாநாடுகளில் இலங்கை கட்டாயம் பங்கேற்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்வதாகவும், புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதாகவும் உறுதியளித்த அனுரகுமார திசாநாயக்க, தற்போது ஆட்சிக்கு வந்த பின்னர் ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் அதிகரித்துக் கொண்டுள்ளதோடு, புதிய அரசியலமைப்புக்கு பதிலாக ஒரேயொரு சரத்தை மட்டுமே திருத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், மின்சாரக் கட்டணம், எரிபொருள் விலை மற்றும் விலைச் சூத்திரம் ஆகியவற்றை ரத்து செய்வதாகத் தேர்தலுக்கு முன்னர் கூறியவர்கள், இப்போது அதுபற்றிப் பேசுவதில்லை எனவும், மாறாக மக்கள் மத்தியில் வெறுப்புணர்வைப் பரப்பும் கருத்துக்களையே ஜனாதிபதி பேசி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அரசாங்கத்தின் கொள்கைகளால் பொதுமக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், 2026 ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் மட்டும் 15 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் அடகு வைக்கப்பட்டுள்ளதாகவும், இது 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 16.12 சதவீத அதிகரிப்பு என்றும் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்ட இலக்குகளையும் தாண்டி அரசாங்கம் மக்கள் மீது வரிச்சுமையைச் சுமத்தி வருவதாகவும், ஜனாதிபதி கூறும் எரிபொருள் மானியம் மக்கள் செலுத்தும் வரிப் பணமே தவிர மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி நிதியிலிருந்து வழங்கப்படுவதல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

நாட்டில் சட்டம் துல்லியமாக நடைமுறைப்படுத்தப்படுவதாக ஜனாதிபதி கூறுவது உண்மையானால், அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியான பின்னர் இடம்பெற்ற 323 கொள்கலன்கள் சட்டவிரோதமாக சுங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டமை, தரமற்ற 19 நிலக்கரி கப்பல்கள் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டமை மற்றும் திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர்கள் காணாமல் போனமை ஆகிய ஊழல்கள் குறித்து விசாரணை அறிக்கைகள் ஏன் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.

இதன்மூலம் பெலவத்தையிலுள்ள ஆதரவாளர்களுக்கு ஒரு சட்டமும், ஏனையோருக்கு வேறு ஒரு சட்டமும் நடைமுறையிலிருப்பது வெளிப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், சூரிய சக்தி முதலீட்டாளர்கள் இன்று அநாதரவாக்கப்பட்டு, புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
அரசாங்கத்திற்கா அல்லது எதிர்க்கட்சிக்கா மக்களின் ஆதரவு உள்ளது என்பதை அறிந்துகொள்ள மாகாண சபை தேர்தலே சிறந்த தீர்வாகும் எனக் குறிப்பிட்ட அவர், ஓராண்டுக்குள் தேர்தல் நடத்தப்படும் எனக் கூறிய அரசாங்கம் தற்போது பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமித்து அதனை இழுத்தடிப்பு செய்வதாகவும் தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் சில விடயங்களில் இணைந்து செயற்பட்டாலும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்து தேர்தலில் போட்டியிடாது எனக் கூறிய அவர், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதில் எமக்கு எவ்வித சிக்கலும் இல்லை என்றும் ஏனைய கட்சிகளை இணைத்துக்கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆற்றல் உள்ளது என்றும் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.