அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் சட்டத்தரணி யோஹான் அரியவன்ச
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி (SJB) தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த சட்டத்தரணி யோஹான் அரியவன்ச, அரசாங்கத்தின் சட்ட அமலாக்க நடவடிக்கைகளில் காணப்படும் இரட்டை நிலைப்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், 2024 செப்டம்பர் 21 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்ற போதிலும், அதற்குப் பிறகு இடம்பெற்ற ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் சரியாக எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை என்றார்.
எனவே, செப்டம்பர் 21 க்கு முன்னரும் பின்னரும் இடம்பெற்ற அனைத்து ஊழல்களுக்கும் எதிராகச் சட்டம் ஒரே மாதிரியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், நாட்டிற்குத் தரமற்ற 19 நிலக்கரி கப்பல்கள் வருகை தந்துள்ளமை குறித்து அரசாங்கம் உடனடியாகச் சரியான விசாரணையை நடத்த வேண்டும் எனத் தெரிவித்த அவர், இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நபர்களுடன் ஜனாதிபதி இணைந்து செயற்படுவதாகச் சாட்டினார்.
மேலும், திறைசேரியின் நிதி காணாமல் போனமை தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும், நிதி அமைச்சின் நிதிச் செயலாளரான ஹர்ஷன சூரியப்பெருமவிற்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதியால் முடியும் என்றும் குறிப்பிட்டார்.
சட்டம் அனைவருக்கும் சமமானது என்றால், அரசாங்கம் முதலில் தனது தூய்மையை நிரூபித்த பிறகே ஏனைய குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், அண்மையில் கொழும்பு துறைமுகத்தில் ‘ஐஸ்’ போதைப்பொருள் அடங்கிய இரண்டு கொள்கலன்களைக் கைப்பற்றி விசாரணை நடத்திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மால் கொடித்துவக்கு உள்ளிட்ட அதிகாரிகளுக்குத் திடீரென இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
சாதாரணமாகச் சட்டவிரோத போதைப்பொருட்களைக் கைப்பற்றும்போது பெரியளவில் ஊடக விளம்பரங்களைச் செய்யும் அரசாங்கம், இந்தச் சம்பவத்தில் அவ்வாறு செய்யவில்லை என்பதையும், அதிகாரிகள் சரியான நேரத்தில் செயற்படாமல் இருந்திருந்தால் அந்த போதைப்பொருட்கள் சமூகம் முழுவதும் பரவியிருக்கும் என்பதையும் நினைவூட்டினார்.
அதேவேளை, 323 கொள்கலன்கள் சட்டவிரோதமாகச் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட சம்பவத்தில் முன்னாள் சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொடவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணை நடத்தி வரும் போதிலும், அவருக்கு எவ்வித இடமாற்றமோ தண்டனையோ வழங்கப்படவில்லை எனச் சாடினார்.
மாறாக, அவர் ஓய்வுபெற்ற பின்னர் வருமான நிர்வாகம், சீர்திருத்தம் மற்றும் கண்டுபிடிப்புப் பணியகத்தின் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை அவருக்கு வழங்கப்பட்ட பரிசா என்றும் கேள்வி எழுப்பினார்.
எந்தவொரு சோதனையும் இன்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சம்பவம் ஒருபுறமிருக்க, போதைப்பொருளைக் கைப்பற்றிய பொலிஸ் அதிகாரிகளுக்குத் தண்டனையும் சுங்க அதிகாரிகளுக்குச் சலுகையும் வழங்கும் அரசாங்கத்தின் இந்த இரட்டை நிலைப்பாட்டை மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும் எனக் குறிப்பிட்ட அவர், ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் உண்மைக்காகவே குரல் கொடுக்கும் எனத் தெரிவித்தார்.

