வங்காளக் கடலில் தீவிரமடையும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: இலங்கையின் பல பகுதிகளில் பலத்த மழை மற்றும் காற்றின் வேகம் அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

வங்காளக் கடற்பகுதியில் உருவான குறைந்த அழுத்தப் பிரதேசம் தீவிரமடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறல் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த அமைப்பானது அடுத்த 24 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவெடுத்து இந்தியாவை நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் தொகுதியின் நேரடித் தாக்கம் இலங்கைக்கு இல்லை என்றபோதிலும், அதனை நோக்கி வீசும் பலத்த காற்றுச் சுழற்சி காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை பெய்யும் சூழல் மேலும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். குறிப்பாக இரவு வேளையில் மழை தீவிரமடையக்கூடும் என்பதுடன், சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வடமத்திய மாகாணத்திலும் மன்னார் மாவட்டத்திலும் சில தடவைகள் மழை பெய்யக்கூடும் என்பதுடன், ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது.
இதேவேளை மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடல் பிராந்தியங்களை பொறுத்தவரை, கங்கசந்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பகுதிகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
ஏனைய கடற்பகுதிகளில் மாலையில் அல்லது இரவில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும். அத்துடன் கங்கசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக சிலாபம் வரையான மற்றும் மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரித்து, கடல் கொந்தளிப்பாகக் காணப்படும்.
புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் அலைகள் 2.0 முதல் 3.0 மீற்றர் வரை உயரக்கூடும் என்பதால், இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசி கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக மாறக்கூடும்.
இதன் காரணமாக வங்காளக் கடற்பகுதியில் மழை மற்றும் காற்றின் வேகம் கணிசமாக அதிகரிக்கும் என்பதால், மறு அறிவித்தல் வரும் வரை மீனவர்கள் மற்றும் கடற்படையினர் வங்காளக் கடற்பகுதிக்கு கடற்பயண நடவடிக்கைகளுக்காகச் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஏற்கனவே அப்பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இடிமின்னல் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைக்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதுடன், வளிமண்டலவியல் திணைக்களத்தின் அடுத்தடுத்த உத்தியோகபூர்வ அறிவிப்புகளை அவதானத்துடன் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

