சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்: பத்தரமுல்லே சீலரத்ன தேரர் வலியுறுத்தல்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

எதிர்காலத்தில் அரசியல் நிலைமைகள் மாற்றமடையும் பட்சத்தில் ஜனாதிபதியை காப்பாற்ற வேண்டிய நிலை நாமல் ராஜபக்ஷவுக்கு ஏற்படக்கூடும் என ஜனசெத்த பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் நலன் விசாரிப்பதற்காக வியாழக்கிழமை (17) அங்கு சென்று அவரைச் சந்தித்த பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்திற்கு அனைவரும் தலைவணங்க வேண்டும் என்றும், நாட்டில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்போது அனைவருக்கும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய அரசாங்கம் திருட்டு அல்லது ஊழல் சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
எனினும், சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது திருடப்பட்டதாகக் கூறப்படும் பணத்தை மீண்டும் பெற்றுக் கொள்ள முடியுமா என்பதில் அரசாங்கம் கவனஞ் செலுத்த வேண்டும் என்றும், வெறுமனே வழக்குகளைத் தொடர்ந்து முன்னெடுப்பது மட்டும் போதாது என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது நாமல் ராஜபக்ஷ சிறையில் இருப்பதை நாம் பார்க்கின்றோம். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை; ஏனையவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் அந்தந்த முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் நாமல் ராஜபக்ஷ இன்னும் இளைஞராக உள்ளார். அரசியல் களத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு விதமான மாற்றங்கள் ஏற்படுகின்றன.
ஒரு பக்கம் இருப்பவர்கள் மறுபக்கம் செல்லலாம்; அரசியல் நிலைப்பாடுகளும் மாறக்கூடும் என்பதால், எதிர்காலத்தில் நிலைமைகள் தலைகீழாக மாற வாய்ப்புள்ளது என அவர் குறிப்பிட்டார்.
சுமார் 60 இலட்சம் வாக்குகளில் ஒரு பகுதியினர் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்துள்ளனர் என்றும், அந்த மக்கள் எதிர்காலத்தில் மீண்டும் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளக்கூடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது தெரிவு செய்யப்பட்ட சிலரை மட்டும் இலக்கு வைக்காமல், தவறிழைத்த அனைவரையும் கைது செய்து சரியான முறையில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், நாட்டிற்கு ஏற்பட்டுள்ள நிதி இழப்புகளை மீட்டெடுப்பதற்கும், கிடைக்க வேண்டிய வருமானத்தைப் பெற்றுக் கொள்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், யார் தவறு செய்திருந்தாலும் அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

