மட்டக்குளி கொடூர விபத்து: கஞ்சா போதையில் காரை ஓட்டி 3 பேரின் உயிரைப் பறித்த சாரதி கைது!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

கொழும்பு, மட்டக்குளி – அளுத்மாவத்தை, பேர்குசன் சந்திக்கு அருகில் இடம்பெற்ற கோர வீதி விபத்து தொடர்பாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

வீடொன்றில் இருந்து புறப்பட்ட ‘BYD’ ரக மின்சாரக் காரொன்று சுமார் 200 மீட்டர் தூரம் பயணித்த நிலையில், வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியுடன் பலமாக மோதியுள்ளது.

தொடர்ந்து கட்டுப்பாட்டை இழந்த அக் கார், மேலும் ஒரு முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதியதுடன், மோட்டார் சைக்கிளை சுமார் 20 மீட்டர் தூரம் இழுத்துச் சென்று, விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 210 மீட்டர் தூரத்திலேயே நின்றுள்ளது.

இந்த கொடூர விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 பெண்கள் உட்பட 10 பேர் பலத்த காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தை அடுத்து காரின் சாரதி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து, அவர் சட்டவைத்திய அதிகாரியிடம் (JMO) ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், சாரதி கஞ்சா போதையில் காரைச் செலுத்தியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

காரின் வேகம் திடீரென அதிகரித்து, தனது கட்டுப்பாட்டை மீறிச் சென்றதால் விபத்து நிகழ்ந்ததாக சாரதி தெரிவித்துள்ள போதிலும், தண்டனைச் சட்டக்கோவை மற்றும் மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ், அலட்சியமாக வாகனத்தைச் செலுத்தி மரணத்தை ஏற்படுத்தியமை உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அத்துடன், கார் தானாகவே வேகம் எடுத்ததா என்பதைத் தொழில்நுட்ப ரீதியாகக் கண்டறிய, மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்தின் தலைமையில் மற்றும் மொறட்டுவை பல்கலைக்கழக பொறியியல் பீட மின்சாரப் பொறியியல் நிபுணர்கள் அடங்கிய சிறப்பு நிபுணர் குழு மூலம் வாகனத்தைச் சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், சாரதியின் மனநிலை மற்றும் கஞ்சா பயன்பாடு தொடர்பில் அறிக்கையைப் பெற மருத்துவக் குழுவொன்றின் பரிசோதனைக்கும் நீதிமன்ற அனுமதி கோரப்படவுள்ளது.

கொழும்பு போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளரின் நேரடி மேற்பார்வையில் மட்டக்குளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சந்தேகநபரான சாரதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.